மழையால் பாதிக்கப்பட்ட 2026 இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய (07) போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
நேற்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமாகவிருந்த போட்டியின் தொடக்கமானது தொடர் மழையின் காரணமாக இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாகத் தாமதமானது.
பின்னர் வானிலை சீராக, இரு அணிகளுக்கும் 11 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் போட்டி ஆரம்பமானது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 150 ஓட்டங்கள் என்ற வலுவான இலக்கினை பதிவு செய்தது.
பார்சபாரா மைதானத்தில் முதலில் துடுப்பாட்டம் செய்ய அழைக்கப்பட்ட தொடக்க ஆட்டக்காரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி, தொடக்கத்திலிருந்தே அதிரடியாக ஆடி, வெறும் 5 ஓவர்களில் 80 ஓட்டங்களை சேர்த்தனர்.
ஜெயஸ்வால் 32 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 77 ஓட்டங்களை எடுத்து அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்தார்.
அதேசமயம், 15 வயதான சூர்யவன்ஷி, தனது முதல் ஓவரிலேயே வேகப் பந்து வீச்சு ஜாம்பவான் ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சில் இரண்டு சிக்ஸர்கள் விளாசியதுடன் வெறும் 14 பந்துகளில் 39 ஓட்டங்களை குவித்தார்.
11 ஓவர்களுக்கு 151 என்ற கடினமான இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் வலுவான துடுப்பாட்ட வரிசை ஆரம்பத்திலேயே சரிந்தது.
இறுதியாக அவர்கள் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 123 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டனர்.
ராஜஸ்தான் அணி சார்பில் அதிகபடியாக சந்தீப் சர்மா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
போட்டியின் ஆட்டநாயகனாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவானார்.
இந்த வெற்றியானது நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி பெற்றுக் கொண்ட மூன்றாவது வெற்றியாகும் என்பதுடன் இது அவர்களை புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கும் கொண்டு சேர்த்தது.
அதேநேரம், மும்பை அணியின் இரண்டாவது தோல்வியாகும் இது – புள்ளிகள் பட்டியலில் அவர்கள் ஏழாவது இடத்தில் உள்ளனர்.














