மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலை ஊழியர்கள் மீதான தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் தொடர்பில் சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வைத்தியசாலையின் வைத்தியர்கள் உள்ளிட்ட முழு ஊழியர்களும் இன்று (30) காலை முதல் கறுப்புப் பட்டி அணிந்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த (28) ஆம் திகதி மஸ்கெலியா பகுதியில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஒருவரை தாக்குவதற்காக மற்றுமொரு குழுவினர் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். இதனைத் தடுக்க முயன்ற வைத்தியசாலை ஊழியர் மற்றும் தாதியர் ஒருவரை குறித்த கும்பல் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முற்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும், இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என மாவட்ட வைத்திய அதிகாரி ஏ.ஆர்.என். ரிசான் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர்கள் கைது செய்யப்படும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக சிகிச்சைக்காக வருகை தந்த நோயாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.














