யூத எதிர்ப்பு வன்முறை அதிகரித்ததைத் தொடர்ந்து, பிரிட்டன் முழுவதும் உள்ள யூத வழிபாட்டுத் தலங்கள், பாடசாலைகள் மற்றும் பிற யூத சமூக மையங்களைப் பாதுகாப்பதற்காக, முன்னாள் ரோயல் மரைன்ஸ் மற்றும் பாராசூட் படைப்பிரிவு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை கோல்டர்ஸ் கிரீனில் நடந்த கத்திக்குத்துத் தாக்குதலில் இரண்டு யூதர்கள் காயமடைந்ததையும், அண்மைய வாரங்களில் யூதர்களுடன் தொடர்புடைய இடங்களைக் குறிவைத்து நடந்த தொடர்ச்சியான தீவைப்புச் சம்பவங்களையும் தொடர்ந்து, உயரடுக்கு இராணுவப் பிரிவுகளைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் இவ்வாறு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
புதன்கிழமை நடந்த தாக்குதலின் பின்னர் இங்கிலாந்து அரசாங்கம், தேசிய பயங்கரவாத அச்சுறுத்தலின் அளவை கடுமையாக உயர்த்தியதுடன், நாட்டில் மற்றொரு தாக்குதல் நிகழ அதிக வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது.
கோல்டர்ஸ் கிரீனில் நடந்த கத்திக் குத்து தாக்குதல் தொடர்பாக சோமாலியாவில் பிறந்து, 1990 ஆம் ஆண்டுகளில் குழந்தையாக சட்டப்பூர்வமாக இங்கிலாந்தில் குடிபெயர்ந்த 45 வயதான பிரிட்டிஷ் குடிமகள் எசா சுலைமான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மூன்று கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் மற்றும் பொது இடத்தில் கூர்மையான ஆயுதத்தை வைத்திருந்த ஒரு குற்றச்சாட்டை அவர் தற்சமயம் எதிர்கொண்டுள்ளார்.













