மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸுவை வரவேற்கும் உத்தியோகபூர்வ அரச விழாவினைத் தொடர்ந்து, சுற்றுலா, கல்வி, உயர்கல்வி, சுகாதாரம், விளையாட்டு, இளைஞர் மேம்பாடு, ஆவணக்காப்பகம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியத் துறைகளை உள்ளடக்கிய ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இலங்கைக்கும் மாலைத்தீவுக்கும் இடையில் இன்று (04) கைச்சாத்திடப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இருதரப்புப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இரு நாடுகளின் தலைவர்களும் தங்களது கலந்துரையாடல்களின் முடிவுகளை எடுத்துரைக்கும் ஒரு கூட்டு ஊடக அறிக்கையை வெளியிட்டனர்.
அதில், இலங்கைக்கு வருகை தருமாறு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக்கொண்டதற்கும், அண்மைக்கால பேரிடர் காலங்களில் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவிகளுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க இதன்போது மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸுக்கு நன்றியை தெரிவித்தார்.
உலகளாவிய பருவநிலை மாற்றத்தை ஒரு பொதுவான சவாலாக எடுத்துரைத்த ஜனாதிபதி அநுரகுமார, உயர்ந்து வரும் கடல் மட்டமும் அதிகரித்து வரும் உலகளாவிய வெப்பநிலையும் இரு நாடுகளுக்கும் அவசரமான மற்றும் பிரதானமான கவலைகள் என்று சுட்டிக்காட்டினார்.
மேலும் இலங்கையில், தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, மீன்வளம், வேளாண் பதப்படுத்துதல், சுற்றுலா, ரியல் எஸ்டேட் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராயுமாறு மாலைத்தீவுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜனாதிபதி முய்ஸு, எதிர்வரும் மே 6 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்.
2023 இல் பதவியேற்ற பின்னர் இலங்கைக்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.














