விசா நிபந்தனைகளை மீறி நாட்டில் தங்கியிருந்து நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட வெளிநாட்டினர் குழு ஒன்று, கொழும்பு, மாத்தறை பகுதியில் தனித்தனியாக நடத்தப்பட்ட சோதனைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு ஒன்று, கொள்ளுப்பிட்டி உத்தரானந்த மாவத்தை பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் நேற்று மாலை (06) சோதனை நடத்தினர்.
இதன்போது, 41 ஆண் சந்தேக நபர்களும், 33 பெண் சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 74 வெளிநாட்டுப் பிரஜைகளைக் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் 19 முதல் 39 வயதுக்குட்பட்ட வியட்நாம் நாட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.
இது தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், மாத்தறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு, நேற்று மாலை கந்தறை பகுதியில் உள்ள ஒரு விடுதியில் சோதனை நடத்தினர்.
இதன்போது, ஒரு பெண் சந்தேக நபர் உட்பட மேலும் ஆறு வெளிநாட்டுப் பிரைஜகள் கைது செய்யப்பட்டனர்.
சுற்றுலா விசாக்களில் நாட்டில் தங்கியிருந்தபோது வணிகம் செய்ததற்காகவும், வெளிநாட்டு சிகரெட்டுகளை வைத்திருந்ததற்காகவும் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் 25 முதல் 40 வயதுக்குட்பட்ட தாய்வான் மற்றும் சீன நாட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து கந்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.














