ஸ்காட்லாந்தின் ருதர்கிளென் (Rutherglen) பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்று மாலை ஏற்பட்ட பயங்கரத் தீயைக் கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.
நேற்று மாலை 6:00 மணிக்குப் பின்னர் , பார்டோனால்டு வீதியில் (Baronald Street) உள்ள ஒரு வர்த்தக நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
நான்கு மாடி குடியிருப்பு ஒன்றின் தரைதளத்தில் அமைந்துள்ள அங்காடியின் பாதாள அறையில் (Basement) இந்தத் தீ முதலில் தொடங்கியதாகக் கருதப்படுகிறது.
ஸ்காட்லாந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையைச் (SFRS) சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் 22 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை நிலவரப்படி, 6 தீயணைப்பு வாகனங்கள் இன்னும் அவ்விடத்தில் முகாமிட்டுத் தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன.
தீ விபத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி பார்டோனால்டு வீதி, டால்மார்னாக் வீதி (Dalmarnock Road) மற்றும் ஃபார்ம்லோன் வீதி (Farmeloan Road) ஆகிய முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன.
மேலும், அப்பகுதியில் அடர்ந்த புகை சூழ்ந்துள்ளதால், உள்ளூர்வாசிகள் தங்களது வீடுகளின் ஜன்னல்களை மூடி வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது காயங்கள் குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. தீ விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.












