இஸ்ரேலிய இராணுவத்தைச் சேர்ந்த மூன்று வீரர்கள் மற்றும் ஒரு பொதுமகன் ஆகியோர் ஈரானிய உளவுத்துறைக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் சிறுவர்களாக இருந்த காலத்திலிருந்தே இந்தப் பணிகளில் ஈடுபட்டதாக ‘Ynet’ செய்தித் தளம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய உள்நாட்டு பாதுகாப்பு முகமையான ‘ஷின் பெட்’ (Shin Bet) மற்றும் பொலிஸார் இணைந்து நடத்திய விசாரணையில் , இஸ்ரேலிய விமானப்படைக்குச் சொந்தமான பயிற்சி தளம் உள்ளிட்ட மிகவும் பாதுகாக்கப்பட்ட இடங்களை இவர்கள் ரகசியமாகப் படம்பிடித்துள்ளமை , இதில் கைதானவர்களில் சிலர் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரிலேயே ஈரானிய முகவர்களை அணுகி தகவல்களைப் பகிர முன்வந்துள்ளமை தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் கடந்த மார்ச் மாதமே கைது செய்யப்பட்ட போதிலும், இது தொடர்பான குற்றப்பத்திரிகையை இன்று (வெள்ளிக்கிழமை) தலைமை வழக்கறிஞர் அலுவலகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே பிராந்திய ரீதியாகப் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், நாட்டின் பாதுகாப்புப் படையில் இருந்தவர்களே உளவு பார்த்ததாகக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.













