பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு நேற்று கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் ஜூன் மாதம் 04ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் சார்பில் நேற்று முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், இந்த மனுவை முன்னெடுத்துச் செல்வதற்குள்ள சட்டப்பூர்வத் தன்மை தொடர்பாக ஆரம்பகட்ட ஆட்சேபனைகளை முன்வைக்க எதிர்பார்ப்பதாக நீதிமன்றிற்குத் தெரிவித்தார்.
மனுதாரரான சுரேஷ் சலே சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் அல்லது குழுக்களின் எந்தவொரு விசாரணையிலும், இந்தத் தாக்குதலுடன் தனது கட்சிக்காரருக்குத் தொடர்பிருப்பதாக எவ்வித சாட்சியங்களும் முன்வைக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.
2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் 30ஆம் திகதி வரை தனது கட்சிக்காரர் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பாதுகாப்பு பாடநெறி ஒன்றில் கலந்துகொண்டிருந்ததால், தாக்குதல் நடந்த சமயத்தில் அவர் இலங்கையில் இருக்கவில்லை என்றும் சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார்.
அசாத் மௌலானா இலங்கையின் நீதிமன்றக் கட்டமைப்பு சீரழிந்ததாக விமர்சித்ததன் மூலம் நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி, அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏன் தாக்கல் செய்யப்படவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.
அத்துடன், தனது கட்சிக்காரர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஆறாவது மாடியில் மனிதர்கள் தங்குவதற்குப் பொருத்தமற்ற சிறிய அறையொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் சட்டத்தரணி குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஒரு பழமையான கட்டிடம் என்பதால் அங்குள்ள அதிகாரிகளே குறைந்தபட்ச வசதிகளுடன்தான் பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டார்.
பின்னர் ரிட் மனு மீதான மேலதிக விசாரணைகள் ஜூன் மாதம் 04ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
















