பல நாட்கள் நீடித்த எதிர்பார்ப்பு, உயர்மட்டக் கலந்துரையாடல்கள் மற்றும் ஆலோசனைகளுக்குப் பின்னர், வி.டி. சதீசன் கேரளாவின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார் என்று காங்கிரஸ் கட்சி இன்று (14) அறிவித்தது.
கேரளாவில் பத்தாண்டு கால இடதுசாரி ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்ற பத்து நாட்களுக்குப் பின்னர் இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, கேரளாவுக்கு பொறுப்பான காங்கிரஸ் பொதுச் செயலாளர் தீபா தாஸ்முன்ஷி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அவருடன் காங்கிரஸ் தலைவர்களான அஜய் மேக்கன், முகுல் வாஸ்னிக் மற்றும் ஜெயராம் ரமேஷ் ஆகியோரும் உடனிருந்தனர்.
கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் பல தலைவர்களும், காங்கிரஸின் கேரள பிரிவின் முன்னாள் தலைவர்களும் டெல்லியில் கட்சியின் உயர்மட்டத் தலைமையைச் சந்தித்து, கலந்துரையாடி ஒரு பெயரைத் தேர்ந்தெடுத்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் பதவிக்கான மூன்று முன்னணி வேட்பாளர்களில், சதீசனுடன் கே.சி. வேணுகோபால் மற்றும் ரமேஷ் சென்னிதலா ஆகியோரும் அடங்குவர்.
மே 4 அன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, மற்ற மாநிலங்கள் தங்களது புதிய முதலமைச்சர்களையும் அரசாங்கங்களையும் அமைத்த நிலையில், காங்கிரஸ் தனது முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம் செய்தது கேரளாவில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.












