இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஒன்பது மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்துப் பேசுவதற்காக, அடுத்த வாரம் டெல்லிக்குச் செல்லவிருப்பதாகத் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் இன்று (13) தெரிவித்தார்.
டெல்லி செல்லும் அவர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் ஆகியோரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீநாத், தமிழக மீனவர்கள் விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், இது குறித்து ஏற்கனவே தமிழக முதல்வருடன் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், மீன்வளத் துறைக்கான மானியக் கோரிக்கையில் மீனவர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் இடம்பெறும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட அனுமதி கோரி தூத்துக்குடி இயந்திரப் படகு மீனவர்கள் விடுத்த கோரிக்கை குறித்துப் பேசிய ஸ்ரீநாத், இக்கோரிக்கையானது மீன்வளத் துறையின் மானியக் கோரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்த அறிவிப்பு கூட்டத்தொடரின்போது வெளியிடப்படும் என்றும் உறுதிப்படுத்தினார்.
நேற்று இரவு வேளையில், தலைமன்னார் ஊருமலை முனைக்கு அப்பால் அமைந்துள்ள இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீன்பிடிப் படகொன்றும், அதிலிருந்த ஒன்பது இந்திய மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
சம்பந்தப்பட்ட மீன்பிடிப் படகு சர்வதேச கடல் எல்லைக் கோட்டை கடந்து இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து, கடலடிப் பகுதிக்கு சேதம் விளைவிக்கும் ‘Bottom Trawling’ முறையைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
அதன்படி, கைப்பற்றப்பட்ட ஒன்பது இந்திய மீனவர்களும் மீன்பிடிப் படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.







