முள்ளிவாய்க்காலில் காய்ச்சப்பட்ட கஞ்சியை இன அழிப்பின் நினைவுச் சின்னமாகப் பயன்படுத்த வேண்டும் என்று ஓர் அறிக்கையின் மூலம் “தமிழ் சிவில் சமூக அமையம்” என்ற குடிமக்கள் சமூகம் கேட்டுக் கொண்டது.உணவு ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்ட போர்க்களத்தில் மக்கள் உயிர் வாழ்வதற்காகச் சமைத்து அருந்திய உணவையே நினைவுச் சின்னமாகக் காவலாம் என்று அந்த சிவில் சமூகம் பரிந்துரைத்தது.
பட்டினியை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்திய போர்க்களத்தில் மக்கள் உயர் தப்பிப் பிழைப்பதற்காக அருந்திய உணவுகளில் ஒன்றுதான் முள்ளிவாய்க்கால் கஞ்சி.அந்தக் காலகட்டத்தில் வாய்பன் இருந்தது;ரொட்டி இருந்தது;துவரம் பருப்பு வடை இருந்தது.முள்ளிவாய்க்காலுக்கு இறுதிக்கு கட்டப் போர் வர முன்னரே மாத்தளனில்,பொக்கணையில்,வலைஞர் மடத்தில் கஞ்சி இருந்தது.
அந்த காலகட்டத்தில் நிவாரணத்துக்காகத் தரப்பட்ட அரிசி ஓரளவுக்கு இருந்தது:அங்கர் பால்மா சிறிதளவு இருந்தது;அமெரிக்க மா சிறிதளவு இருந்தது;சமையல் எண்ணெய் சிறிதளவு இருந்தது; சீனி சிறிதளவு இருந்தது; இந்திய நிவாரணத்தில் கிடைத்த துவரம் பருப்பு சிறிதளவு இருந்தது.தேங்காய் இருக்கவில்லை.ஏனைய கறி சரக்குச் சாமான்கள் குறைந்த அளவே இருந்தன. எல்லாவற்றையும் விட முக்கியமாக சமைப்பதற்கு நிரந்தரமான இடம் இருக்கவில்லை.சமைப்பதற்கு மனம் இருக்கவில்லை.சமைத்ததைச் சாப்பிடுவதற்கும் பசி இருக்கவில்லை.
அக்காலகட்டத்தில் ஜனங்கள் தங்கள் தங்கள் கொள்ளளவுக்கு ஏற்ப தங்களிடமிருந்ததைச் சமைத்தார்கள்.சிலர் ரொட்டி தயாரித்தார்கள்.அது தேங்காய் இல்லாத ரொட்டி.சிலர் வடை சுட்டார்கள்.அது துவரம் பருப்பும் செத்தல் மிளகாயும் போட்ட வடை. சிலர் வாய்ப்பன் சுட்டார்கள்.
சமைக்க இடமில்லாதவர்களுக்கும்,மனமில்லாதவர்களுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தமிழ் அகதிகள் புனர்வாழ்வு அமைப்பும் நிர்வாக சேவையும் சமைத்துக் கொடுத்த உணவுதான் முள்ளிவாய்க்கால் கஞ்சி. சில பகுதிகளில் சேவா லங்கா என்ற தொண்டு நிறுவனமும் கஞ்சி காய்ச்சிக் கொடுத்ததாக அறியமுடிந்தது.
கடைசிக் கட்டப் போரில் காய்ச்சப்பட்ட கஞ்சி சுவையானது அல்ல.தேங்காய்ப் பால் இருக்கவில்லை.ஒரு கிடாரத்தில் நீரை ஊற்றி,அரிசியைப் போட்டுக் கொதிக்க வைப்பார்கள்.அரிசி கொதித்து வரும்போது இரண்டு அங்கர் பக்கெட்டுகளை உடைத்து அந்த பால் மாவை கரைத்து கஞ்சிக்குள் ஊற்றுவார்கள். அதுதான் கஞ்சி.
இதுபோன்ற கஞ்சியை ஒரு நினைவுச் சின்னமாக தலைமுறைகள் தோறும் கடத்துவதன்மூலம் இறுதிக் கட்டப் போரின் நினைவுகளைத் தலைமுறைகள் தோறும் கடத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.யூதர்களின் வரலாற்றில் இதற்கு முன்னுதாரணம் உண்டு.யூதர்களின் முக்கிய விடுமுறை தினங்களில் ஒன்று பாஸ்ஓவர்.இது தலைமுறைகள் தோறும் விசேஷமாக அனுஷ்டிக்கப்படுகின்ற ஒரு பெருநாள் ஆகும்.இந்நாளில் யூதர்கள் தங்கள் வீடுகளில் உணவைப் புளிக்க வைக்கும் பொருட்கள் சேர்க்கப்படாத தட்டையான ரொட்டியை உண்பார்கள்.வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றாகக் கூடியிருந்து ஏன் அந்த உணவை அந்த நாளில் அருந்துகிறார்கள் என்பதற்குரிய வரலாற்றுக் காரணத்தை மூத்தவர்கள் இளையவர்களுக்கு எடுத்துக் கூறுவார்கள்.
பல நூற்றாண்டுகளுக்கு முன் எகிப்தியர்கள் யூத தேசத்தை ஆக்கிரமித்தார்கள்.அந்த ஆக்கிரமிப்பின் நினைவுகளையும் அந்த ஆக்கிரமிப்பில் இருந்து யூதர்கள் எப்படி விடுதலை அடைந்தார்கள் என்ற கதையையும் அவ்வாறு சுதந்திரம் அடைந்த யூதர்கள் எப்படி செங்கடலைக் கடந்து தப்பி வந்தார்கள் என்ற கதையையும் மூத்தவர்கள் இளையவர்களுக்குச் செல்வார்கள்.அதாவது ஓர் இனம் தனது இறந்த காலக் கதைகளை புதிய தலைமுறைக்கு எடுத்துக்கூறும் ஒரு யூதப் பெருநாள் அது.
அவ்வாறே முள்ளிவாய்க்கால் கஞ்சியை ஈழத் தமிழர்களின் கிட்டத்தட்ட நான்கு தசாப்தகால யுத்த காலத்தை எடுத்துக் கூறுவதற்கான ஒரு நினைவுச் சின்னமாக,குறிப்பாக இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற இன அழிப்பின் கதைகளை எடுத்துக்கூறும் ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற அரசியல் எதிர்பார்ப்பு இதில் உண்டு.
கடந்த 17 ஆண்டுகளிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சியானது ஈழத் தமிழர்கள் பரவி வாழும் எல்லா இடங்களிலும், நாடுகளிலும்,கண்டங்களிலும் பரவலாகக் காய்ச்சி கொடுக்கப்படுகிறது.முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின்போது தாயகத்தில் கிராமங்கள் தோறும், நகரங்கள் தோறும், முக்கிய சந்தைகள் தோறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்படுகிறது.
பல்கலைக்கழக மாணவர்கள்,காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் உறவினர்களின் சங்கங்கள்,மக்கள் அமைப்புகள்,அரசியல் கட்சிகள்,தனிப்பட்ட தன்னார்வலர்கள்… போன்ற பல வகைப்பட்டவர்களும் கஞ்சியைத் தயாரித்துப் பகிர்ந்து வருகிறார்கள்.
அந்தக் கஞ்சிக்கென்று ஒரு பொதுவான ரெசிபி உண்டு.எனினும் நடைமுறையில் அந்த ரெசிபி பின்பற்றப்படுவதில்லை என்பதைத்தான் கஞ்சி தொடர்பான விமர்சனங்கள் காட்டுகின்றன.அரசு இல்லாத தமிழ் மக்களைப் பொருத்தவரை இந்த விடயங்களை ஒருங்கிணைப்பதற்கு ஒரு மைய அமைப்பு இல்லை என்றபடியால் அது ஒருவகையில் தவிர்க்க முடியாதது.மேலும் எந்த ஒரு விடயமும் மக்கள் மயப்படும்போது அது அதன் மூல வடிவத்தில் இருந்து மாற்றப்படும் வாய்ப்புகள் அதிகம் இருக்கும்.கஞ்சிக்கும் அது நடந்திருக்கிறது.
மேலும்,கஞ்சியைச் சிரட்டையில் பகிர்வதற்கு எதிராகவும் விமர்சனங்கள் உண்டு.ஆனந்தபுரம் சண்டைக்குப் பின் தேங்காய் இருக்கவில்லை.முள்ளிவாய்க்காலில் மட்டுமல்ல வலைஞர் மடத்திலும் காய்ச்சப்பட்ட கஞ்சியில் முன்கூறப்பட்டபடி தேங்காய்ப் பால் சேர்க்கப்படவில்லை. தேங்காய் இல்லாத காலம் ஒன்றில் தேங்காய்ச் சிரட்டை எங்கிருந்து கிடைத்தது?என்ற கேள்வி தர்க்கபூர்வமானதுதான்.
இங்கு தேங்காய்ச் சிரட்டை எனப்படுவது ஓர் உள்ளூர்ப் பாத்திரம் அல்லது கிண்ணம்,தமிழ் பண்பாட்டு கிண்ணம் என்ற அடிப்படையில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கலாம். மேலும்,சாதி ஒடுக்குமுறை நிலவிய காலகட்டங்களில் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு சிரட்டையில் தேநீர் கொடுத்த கதைகள் உண்டு. அவ்வாறு தமிழ் மக்கள் மத்தியில் காணப்பட்ட சமூக ஒடுக்கு முறையின் சின்னங்களில் ஒன்றாகவும் சிரட்டை காணப்படுகிறது.அந்த ஒடுக்கு முறைக்கு தமிழ்ச் சமூகம் பொறுப்புக்கூறும் விதத்தில் சிரட்டையை அங்கு பயன்படுத்தலாம்.உள்ளூர் உற்பத்தியான ஒரு கிண்ணத்தை ஒரிஇனத்தின் நினைவுகளோடு இணைப்பதால் ஒன்றும் கெட்டுப்போய் விடாது. அதனால் சூழலுக்கு மாசு இல்லை என்பது மேலதிக நன்மை.
ஆனால் இக்கட்டுரையின் குவிமையம் எதுவென்றால், கஞ்சியின் மூல “ரெசிபி” மாறி வருகிறது என்பல்ல; சிரட்டையில் அதை கொடுக்கக்கூடாது என்பதுமல்ல. இந்தப்பிரச்சினைகளுக்கு ஈழத்தமிழர்கள் ஏதோ ஒரு தீர்வைக் கண்டுபிடிக்கலாம்.
ஆனால் அதைவிட முக்கியமான ஒரு விடயம் உண்டு. எந்த நோக்கத்துக்காக கஞ்சி காய்ச்சப்படுகிறது? எங்கே காய்ச்சப்படுகிறது? பெரும்பாலும் கஞ்சி பொது இடங்களில் தயாரிக்கப்படுகிறது. பொது அமைப்புகளால் தயாரிக்கப்பட்டு பொது இடங்களில்தான் அது விநியோகிக்கப்படுகிறது. எத்தனை பேர் தங்களுடைய வீடுகளில் குறிப்பிட்ட நாளில் அந்த கஞ்சியை ஒரு விரத உணவாகச் சமைக்கிறார்கள்? எத்தனை பேர் தங்கள் பிள்ளைகளுக்கு கஞ்சியோடு சேர்த்து கதைகளை ஊட்டுகிறார்கள்?
கஞ்சி கொடுக்கப்படுகையில் அதோடு சேர்த்து துண்டுப் பிரசுரங்கள் கொடுக்கப்படுகின்றன.இந்தத் துண்டுப் பிரசுரங்களில் கஞ்சிக்குப் பின்னால் இருக்கும் கதை கூறப்படுகிறது.அதன் அரசியல் கூறப்படுகிறது.இங்கேயும் பொதுவான ஒரு மூலஆவணம் கிடையாது. அவரவர் தங்கள் தங்கள் கஞ்சிக் கதைகளை எழுதுவதாகத் தெரிகிறது.ஒரு மக்கள் மயப்பட்ட நிகழ்வில் அப்படித்தான் நிலைமைகள் இருக்கும்.
யார் இந்தக் கதையை சொன்னாலும் அது இன அழிப்பின் கதையாகத்தான் இருக்கும். எனவே அது பிரச்சனை இல்லை. பிரச்சினை என்னவென்றால்,அந்தக் கதையைப் பொது இடங்களில் துண்டுப் பிரசுரங்களாக விநியோகிப்பதற்கும் அப்பால் அதைக் கலை வெளிப்பாடுகளாகத் தயாரித்தால் என்ன? கலை வடிவங்களின் ஊடாகக் கூறப்படும் கதை கேட்பவர்களை அதிகமாகக் கவரும். கஞ்சிக் கதைகளைச் சொல்வதில் புதிய எடுத்துரைப்புகள் தேவை. புதிய கலைக் கண்டுபிடிப்புகள் தேவை.
குறிப்பாக வீடுகளில் அந்தக் கதை திரும்பத்திரும்ப இளம் தலைமுறைக்கு குறிப்பாக ஜென்சி என்று அழைக்கப்படுகின்ற டிக்டாக் தலைமுறைக்குப் பரிமாறப்படுகிறதா? எத்தனை பெற்றோர் அல்லது மூத்தவர்கள் வீடுகளில் தங்கள் பிள்ளைகளுக்கு அந்தக் காலக் கதைகளை எடுத்து கூறுகிறார்கள்?
தாயகத்தில் அந்தக் கதைகளைப் பகிரங்கமாகக் கூறுவதில் சட்டரீதியான பிரச்சினைகள் உண்டு. பயங்கரவாதத் தடைச் சட்டம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதனால் ஆசிரியர்கள் அதனை வகுப்பறைகளில் கூறுவதைத் தவிர்க்கக்கூடும். பெற்றோர் வீடுகளில் அந்தக் கதைகளைக் கூறினால் பிள்ளைகள் மீண்டும் போராடக் கூடும் என்ற பயத்தினாலும் அதைக் கூறாமல் விடக்கூடும். அப்படியென்றால் அந்தக் கதைகளை யார்? வேறு எப்படி? எங்கே? கூறுவது? மே மாதம் ஒரு கிழமை மட்டும் வீதிகளில் பொது இடங்களில் வழியால் போகும் இளம்பிள்ளைகளை இடைமறித்து அதைக் கூறினால் போதுமா? அங்கேயும் அது பிரச்சாரமாக எடுத்துரைக்கப்படுகிறதா? அல்லது கலைத்துவமாக எடுத்துரைக்கப்படுகிறதா? அதை ஜென்சிகள் நின்று கவனித்துக் கேட்கிறார்களா?
கிரேக்க தத்துவ ஞானி பிளாட்டோ கூறுவார் “கதை சொல்லிகள் சமூகத்தை ஆளுகிறார்கள்” என்று. காணொளிகளின் காலத்தில் யு டியூப்பர்கள்தான் புதிய கதை சொல்லிகள்.அதில் மேலோட்டமான,அறிவாழம் இல்லாத, ஜனரஞ்சகமான கதைகளைச் சொல்லும் கதை சொல்லிகள்தான் அதிகம் “வியூவர்சைக்” கவர்கிறார்கள்.அதிகம் டொலர்களையும் கவர்கிறார்கள். பொழுதுபோக்காக இலேசாக, பம்பலாக, மேலோட்டமாக எதையாவது சொன்னால், அதைக் கேட்க லட்சக்கணக்கானவர்கள் உண்டு என்பதைத்தான் தமிழில் அதிகம் ஓடும் யு டியூப் தளங்களில் காணப்படும் பார்வையாளர்களின் எண்ணிக்கை நமக்கு உணர்த்துகிறது.
இப்படிப்பட்டதோர் காணொளிச் சூழலில்;கதை சொல்லிகளின் சூழலில்,முள்ளிவாய்க்கால் கதைகளை தலைமுறைகள் தோறும் கடத்துவதற்கு, புதிய பொருத்தமான வினைத்திறன் மிக்க தொழில்நுட்ப உபாயங்களை ஈழத் தமிழர்கள் வகுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.













