ஹட்டன் டிக்கோயா பகுதியிலுள்ள ஒரு வீடு (வர்த்தக நிலையம்) ஒன்றில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி வயதான கணவன்-மனைவி இருவரையும் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரால் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளையும் ஹட்டன் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று கைப்பற்றியுள்ளது.
கடந்த 2026.05.21 அன்று இரவு வேளையில் ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா பகுதியில் 75 வயதுடைய பெண்ணும் 85 வயதுடைய ஆணும் இவ்வாறு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இச் சம்பவம் குறித்து ஹட்டன் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்தனர்.
அதன்படி நடவடிக்கை எடுத்த பொலிஸ் அதிகாரிகள், நேற்று (23) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குற்றச்செயலுடன் தொடர்புடைய சந்தேகநபரை பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெற்றசோ தேயிலைத் தோட்டப் பகுதியில் மறைந்து இருந்தபோது கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 37 வயதுடைய ஹாலிஎல பகுதியைச் சேர்ந்தவராவார்.
சந்தேகநபர் கைது செய்யப்பட்ட வேளையில், குற்றச்செயலை மேற்கொண்டு கொள்ளையடிக்கப்பட்ட தங்க சங்கிலி, பெண்டன்ட், ஒரு ஜோடி காதணி மற்றும் தங்கத் தகடு ஆகியவை அவரிடமிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டன.
சம்பவம் தொடர்பாக ஹட்டன் பொலிஸ் நிலையம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.













