பிரித்தானியாவில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக மே மாதத்திற்கான மிக உயர்ந்த வெப்பநிலை நேற்று பதிவாகியுள்ளது.
லண்டனின் கியூ கார்டன்ஸ் (Kew Gardens) பகுதியில் வெப்பநிலை 34 தசம் 8 பாகை செல்சியஸ் வரை உயர்ந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது, இதற்கு முன்னர் 2019ஆம் ஆண்டு பதிவான ஆகஸ்ட் மாத பொது விடுமுறை நாள் வெப்பநிலையை விடவும் அதிகமாகும்.
பிரித்தானியாவுக்கு அருகில் ஏற்பட்டுள்ள உயர் அழுத்த மண்டலத்தின் காரணமாகவே இந்த அதீத வெப்ப அலை உருவாகியுள்ளதோடு வேல்ஸ் பகுதியிலும் வெப்பநிலை 32 தசம் 2 பாகையாக அதிகரித்துள்ளது.
கடும் வெயில் காரணமாக இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு ‘amber’ நிற வெப்ப சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், வாகனங்களின் உட்பகுதி 60 பாகை வரை வெப்பமடையக்கூடும் என வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரித்தானியா மட்டுமன்றி ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் வழக்கத்திற்கு மாறாக 10 முதல் 15 பாகை வரை வெப்பநிலை அதிகரித்து, மே மாதத்திற்கான வெப்பநிலை பதிவுகள் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன.














