தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் மிகக் கவலைக்கிடமான அளவிற்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்து, மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை என – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தினார்.
இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசை, இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின்னர், முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக சென்னையில் இருந்து இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
இரண்டு நாள் பயணமாக டெல்லி வந்த அவரை, டெல்லி தமிழ்நாடு இல்லத்தில், தமிழக தலைமைச் செயலர் சாய் குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து, காவல் துறை அணிவகுப்பு மரியாதையும் விஜய்க்கு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது வலியுறுத்த வேண்டிய முக்கிய விஷயங்கள் தொடர்பாக முதல்வர் விஜய், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து, அவர் பிரதமரைச் சந்திக்க புறப்பட்டுச் சென்றார்.
பிரதமர் மோடியைச் சந்தித்த முதல்வர் விஜய், அவருக்கு பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். புதிதாக கட்டப்பட்டுள்ள சேவா தீர்த் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
தொடர்ந்து இருவரும் தமிழ்நாடு மற்றும் தேசிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். சுமார் 20 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ள முக்கிய விபரங்கள் பின்வருமாறு:
அதிகரிக்கும் கைதுகள்: நடப்பு 2026ஆம் ஆண்டில் மட்டுமே தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 12 சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
சிறையிலுள்ள மீனவர்கள்: தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தைச் சேர்ந்த 58 மீனவர்கள் இலங்கைத் தரப்பால் கைது செய்யப்பட்டு, அங்குள்ள சிறைகளில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட படகுகள்: மீனவர்களின் வாழ்வாதார ஆதாரமான 266 விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் இதுவரை இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
முதலமைச்சரின் வலியுறுத்தல்: “தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களது வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும் மத்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும். இலங்கைக் காவலில் உள்ள 58 மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள 266 படகுகளையும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க இலங்கை அரசை, இந்திய அரசு தூதரக ரீதியாக வலியுறுத்த வேண்டும்.”
இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறல்களால் எல்லையோர மாவட்ட மீனவக் குடும்பங்கள் கடுமையான அச்சத்திலும், வாழ்வாதார இழப்பிலும் தவித்து வரும் நிலையில், டெல்லி சென்ற முதலமைச்சர் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினார்.












