நாட்டில் தமிழினப் படுகொலை ஒன்று இடம்பெற்றதாக கூறப்படுகின்ற அறிக்கைகள் தொடர்பாக அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பதை விளக்கமளிக்குமாறு கோரி ‘சர்வஜன அதிகாரம்’ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு கடிதம் ஒன்று அனுப்பி வைத்துள்ளது.
சர்வஜன அதிகாரம் கட்சியின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி ரஞ்சன் செனவிரத்னவின் கையொப்பத்துடன் இந்த கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எவ்விதத்திலும் தமிழ் இனப்படுகொலை நடக்கவில்லை என்பதே ‘சர்வஜன அதிகாரத்தின்’ நிலைப்பாடு எனவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையில் தமிழ் மக்கள் மீது இனவழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதென கத்தோலிக்க அருட்தந்தை ஜீவந்த பிரிஸ் தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே ஜீவந்த பிரிஸ் இந்த விடயத்தைத் தெரிவித்திருந்தார்.
இலங்கையில் சிங்கள அரசாங்கங்களால் தமிழ் இனவழிப்பு நடவடிக்கைகள் திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டதாக ஜீவந்த பிரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் தகி சிவராம் கொலை தொடங்கி தீபச்செல்வனின் நூல்கள் சுங்கத்திணைக்களத்தில் முடக்கப்பட்டமை வரையில் அனைத்தையுமே இனவழிப்பு நடவடிக்கைகளாக கருத வேண்டும் என ஜீவந்த பிரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
1956 ஆம் ஆண்டு, நாட்டில் கொண்டுவரப்பட்ட தனிச்சிங்கள சட்டத்துக்கெதிராக வடக்கிலிருந்து காலி முகத்திடலில் போராட்டம் நடத்த வந்த தமிழர்கள் கொடூரமாக அடித்து துரத்தப்பட்ட வரலாறு உண்டு என்றும் ஜீவந்த பிரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.














