அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனம் S&P, பிரெஞ்சு அரசாங்கத்தின் கடன் மதிப்பீட்டை A+ என்ற நிலையில் தொடர்ந்தும் நிலைநிறுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் மற்றும் அதன் பொருளாதார விளைவுகள் உலக சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும், பிரான்சின் கடன் தரத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. அதேவேளை, நாட்டின் நிதி நிலை தொடர்பான எதிர்கால நோக்கு “நிலையானது” என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு S&P மற்றும் Fitch ஆகிய நிறுவனங்கள் பிரான்சின் கடன் மதிப்பீட்டை தரமிறக்கியிருந்த நிலையில், இந்த முறை S&P எந்தவித மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை. 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 0.1 சதவீதம் சுருங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அரசின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் செலவுக் கட்டுப்பாடுகள் காரணமாக வரவு–செலவுத் திட்ட பற்றாக்குறையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அரசுப் பற்றாக்குறையையும் கடன் சுமையையும் குறைக்கும் முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அடுத்ததாக ஆகஸ்ட் மாதத்தில் Fitch மற்றும் ஒக்டோபர் மாதத்தில் Moody’s ஆகிய நிறுவனங்கள் வெளியிடவுள்ள மதிப்பீட்டு அறிக்கைகள் மீது கவனம் திரும்பியுள்ள நிலையில், வரவிருக்கும் வரவு–செலவுத் திட்ட விவாதங்களும் ஜனாதிபதி தேர்தல் அரசியலும் நாட்டின் பொருளாதாரப் போக்கில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.













