வேல்ஸ் பகுதியில் இந்த வாரம் நிலவிய கடுமையான வெப்ப அலை (Heatwave) காரணமாக, அங்குள்ள புகழ்பெற்ற கடற்கரைகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியுள்ளது.
இதன் காரணமாகப் பல பகுதிகளில் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்ததுடன், கடற்கரைகள் குப்பைக் கூளங்களாகக் காட்சியளிக்கும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை , க்வினெத்தில் (Gwynedd) உள்ள லான்பெடர் (Llanbedr) கிராமத்தில் பல தசாப்தங்களாக நீடித்து வரும் போக்குவரத்துப் பிரச்சினைக்கு மத்தியில், இந்த வாரம் ஏற்பட்ட கடுமையான நெரிசலின் போது இரண்டு சிறுவர்கள் தாங்களாகவே முன்வந்து கார்களை வழிநடத்தி நெரிசலைக் குறைத்தமைக்காகப் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளனர்.
இந்த வெப்ப அலையின் போது வேல்ஸின் புகழ்பெற்ற ‘பாரி தீவு’ (Barry Island) மற்றும் ‘போர்த்கால்’ (Porthcawl) கடற்கரைகளில் மக்கள் பொறுப்பற்ற முறையில் வீசிச் சென்ற குப்பைகள் மலைபோலக் குவிந்து கிடப்பதாகவும், பார்ப்பதற்கே அது அருவருப்பாக உள்ளதாகவும் சுற்றுச்சூழல் அமைப்பான ‘கீப் வேல்ஸ் டைடி தெரிவித்துள்ளது.
அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக மக்கள் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை நோக்கிப் படையெடுக்கும் வேளையில், உள்ளூர் நிர்வாகங்கள் முறையான போக்குவரத்து மற்றும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளத் தவறியுள்ளதாகப் பொதுமக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.













