சைப்பிரஸ் (Cyprus) ஜனாதிபதி நிகோஸ் கிறிஸ்டோடுலைட்ஸ் (Nikos Christodoulides) சமீபத்தில் இந்தியாவிற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையே விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைகளில் மிக முக்கிய உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.
இந்த சந்திப்பின் போது, இந்தியாவின் அதிநவீன ‘பிரம்மோஸ்’ (Brahmos) சூப்பர்சோனிக் ஏவுகணைகள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘நாகாஸ்த்ரா-1’ (Nagastra-1), ‘ஸ்கைஸ்டிரைக்கர்’ (Skystriker) போன்ற காமிகேஸ் ட்ரோன்களை வாங்குவதில் சைப்பிரஸ் நாடு மிகுந்த விருப்பம் தெரிவித்துள்ளது.
மேலும், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் இரு நாடுகளின் படைகளும் இணைந்து செயல்படவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் இந்த ராணுவ ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் பட்சத்தில், அது சர்வதேச அரசியலில் துருக்கி ஜனாதிபதி ரசிப் தையீப் எர்டோகனுக்கு (Recep Tayyip Erdogan) கிடைக்கப்போகும் மிகப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.
சைப்பிரஸ் நாட்டின் வட பகுதியை நீண்டகாலமாகத் துருக்கி ஆக்கிரமித்துள்ளது.
தற்போது சைப்பிரஸ் இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்கினால், அது ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள துருக்கியின் பாதுகாப்பிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறும்.
மத்திய தரைக்கடல் பகுதியில் இந்தியாவின் ஆயுத பலத்துடன் சைப்பிரஸ் பலம்பெறுவது, துருக்கிய ராணுவ வட்டாரங்கள் மத்தியில் தற்போதே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா அண்மையில் பாகிஸ்தான் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை மேற்கொண்டபோது, பாகிஸ்தானுக்கு ஆதரவாகத் துருக்கி நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ரகசியமாக அனுப்பியிருந்தது.
அவற்றை இந்திய எல்லைகளை நோக்கிப் பாகிஸ்தான் ஏவிய போதிலும், இந்தியாவின் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகள் (Air Defence Systems) அந்தத் துருக்கி நாட்டு ட்ரோன்களை நடுவானிலேயே சுட்டு வீழ்த்தித் தகர்த்தன.
அதேபோல், இந்தியாவின் ‘பிரம்மோஸ்’ ஏவுகணைகள் பாகிஸ்தானின் விமான தளங்களை மிகத் துல்லியமாகத் தாக்கி அழித்த வல்லமையை துருக்கி உட்பட உலக நாடுகள் நன்கு அறிவர்.
இதன் காரணமாகவே, இந்திய ஆயுதங்களின் வீரியத்தை உணர்ந்துள்ள துருக்கி, தற்போது சைப்பிரஸின் இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளது.














