சீன இராணுவத்துடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நிறுவனங்களின் பட்டியலில், தொழில்நுட்ப ஜாம்பவானான அலிபாபா மற்றும் மின்சார கார் தயாரிப்பாளரான BYD உள்ளிட்ட சீனாவின் பல முக்கிய நிறுவனங்களை அமெரிக்கா சேர்த்துள்ளது.
பாதுகாப்புத் துறையின் இந்தப் பட்டியல், சீன நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்வதில் உள்ள அபாயங்கள் குறித்து அமெரிக்க அமைப்புகளை எச்சரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆனால் அவை பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதால், அவை உடனடியாகத் தடை செய்யப்படுகின்றன என்று அர்த்தமல்ல.
இந்த நடவடிக்கையானது வொஷிங்டனுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலான பதட்டங்களை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
பென்டகனின் தடைப் பட்டியலில், அமெரிக்காவிற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வர்த்தக சேவைகளை வழங்கும் 80-க்கும் மேற்பட்ட சீன இராணுவ நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிறுவனங்களில் சில, மின்சார வாகனங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்களில் முக்கிய அமெரிக்க நிறுவனங்களுடன் நேரடியாகப் போட்டியிடுகின்றன.
உதாரணமாக, அமெரிக்காவிற்குத் தனது கார்களை ஏற்றுமதி செய்யாத BYD நிறுவனம், இந்த ஆண்டின் தொடக்கத்தில் டெஸ்லாவை முந்தி, உலகின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளராக உருவெடுத்தது.
எவ்வாறெனினும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கையானது பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு செயல் என சீனா கூறியுள்ளது.
இந்தப் பட்டியல் பாகுபாடு கொண்டது என்றும், சீன நிறுவனங்கள் வெளிநாடுகளில் உள்ள சட்டங்களைக் கடுமையாகப் பின்பற்றி வருகின்றன என்றும் அமெரிக்காவிலுள்ள சீனத் தூதரகம் கூறியுள்ளது.
















