நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘மா இண்டி பங்காரம்’ படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் தமிழில் ‘எங்கள் தங்கம்’ என்ற பெயரில் வெளியாகவுள்ள நிலையில் இதன் ட்ரெய்லர் நேற்று வெளியாகியது
‘ஃபேமிலி மேன்’ புகழ் ராஜ் மற்றும் டிகே கதையை உருவாக்க திகந்த் மற்றும் குல்ஷன் தேவய்யா, ஸ்ரீமுகி, கவுதமி, ஆனந்த், லட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.தொடக்கத்தில் சமந்தா தனது காதலரின் வீட்டுக்குள் நுழைவது போல் காட்டப்படுகிறது. அங்குள்ள குடும்பத்தினர் அவரிடம் ‘உன்னை இதற்கு முன்பு எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?’ ‘உன் பெயர் என்ன?’ ‘எந்த ஊர்?’ என அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்கின்றனர். தொடர்ந்து அவரிடம் சாதி சமையல் கலை மற்றும் உடன்பிறந்தவர்கள் குறித்து குற்றவாளியை விசாரிப்பது போல் கேள்விகளை எழுப்புகின்றனர். அந்த வீட்டின் மருமகள் ஒருவரை ‘மா இண்டி பங்காரம்’ (எங்கள் வீட்டுத் தங்கம்) என்று கொண்டாடுகின்றனர்.
இதையடுத்து வாய்ஸ் ஓவரில் பேசும் சமந்தா ‘ஒரு சிறந்த மருமகளாக இருக்க அழகு, அடக்கம், சமையல், பாட்டு என பல தகுதிகள் இருக்க வேண்டும். எனக்கு அப்படி எதுவும் தெரியாது. ஆனால் என் உயிரை பணயம் வைத்தாவது என் குடும்பத்தை நான் காப்பேன்’ என்று ஆவேசமாக பேசுகிறார். அதன் தொடர்ச்சியாக சேலையில் சமந்தா எதிரிகளை பறக்கவிட்டு அடிக்கும் சண்டைக் காட்சிகள் ட்ரெய்லரை ஆக்கிரமிக்கின்றன. அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘ப்ளாஸ்ட்’ படத்தின் சண்டைக் காட்சிகளை இப்படத்தின் ட்ரெய்லரில் வரும் காட்சிகள் நினைவூட்டுகின்றன. அப்படத்தைப் போலவே இதன் ஆக்ஷன் காட்சிகள் தியேட்டரில் ‘ப்ளாஸ்ட்’ ஆகும் என்று நம்பலாம்.
ஒரு முன்னாள் கேங்ஸ்டர் தனது பழைய வாழ்க்கையை விட்டு விலகி குடும்பத்துடன் அமைதியான வாழ்க்கை வாழும் படங்கள் ஆண்களின் பார்வையில் பலமுறை சொல்லப்பட்டிருந்தாலும் ஒரு பெண்ணை சுற்றி சொல்லப்படுவது சுவாரஸ்யத்தையும் எதிர்பார்ப்பையும் கூட்டுகிறது. வரும் ஜூன் 19 அன்று படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

















