முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய சுகீஸ்வர பண்டார, மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகத்தினால் (CCIB) இன்று காலை கைது செய்யப்பட்டு, எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று (18) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே, நீதவான் இந்த விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்தார்.
ஒரே காலப்பகுதியில் இரண்டு அரச நிறுவனங்களில் இருந்து சட்டவிரோதமாகச் சம்பளம் பெற்றுக்கொண்ட நிதி மோசடிச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாகவே அவர் இன்று காலை கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
2022ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளர்களில் ஒருவராகப் பணியாற்றிய சுகீஸ்வர பண்டார, அதே காலப்பகுதியில் அன்றைய ஜனாதிபதி செயலகத்தின் திட்டப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
ஜனாதிபதி செலவினத் தலைப்பின் கீழ் ஒரே நேரத்தில் இந்த இரண்டு பதவிகளுக்குரிய சம்பளப் பணத்தையும் அவர் முறைகேடாகப் பெற்றுக்கொண்டுள்ளார் என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுவின் ஊழல் எதிர்ப்பு குழுவினால், ஜனாதிபதி செலவினத் தலைப்பின் கீழ் இடம்பெற்ற இந்த நிதி மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாக மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகத்திற்கு உத்தியோகபூர்வ முறைப்பாடு ஒன்று அளிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையிலேயே இக்கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சந்தேகநபர் குறித்த உயர் பதவிகளை வகித்துக்கொண்டிருந்த காலப்பகுதியில், அரசாங்கத்திற்குச் சொந்தமான உத்தியோகபூர்வ வாகனங்களைத் தனது தனிப்பட்ட தேவைகளுக்காகத் துஷ்பிரயோகம் செய்துள்ளார். அத்துடன், அதன் அரச ஊழியர்களைத் தனது அரசியல் நடவடிக்கைகளில் சட்டவிரோதமாக ஈடுபடுத்தியுள்ளார் என்ற குற்றச்சாட்டு தொடர்பிலும் மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகம் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.














