வடக்கில் ஆண் மற்றும் பெண் நாய்களுக்கு கருத்தடைச் சிகிச்சையை இந்த ஆண்டும் தொடரவுள்ளதாக வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இந்த வருடம் சுமார் 15,000 நாய்களுக்குச் சிகிச்சை அளிக்கக்கூடிய மருந்துகள் கைவசம் தயாராகவுள்ள நிலையில், இம்முறை பெண் நாய்களுடன் சேர்த்து ஆண் நாய்களுக்கும் சமாந்தரமாகக் கருத்தடைச் சிகிச்சையை முன்னெடுக்கப்படவுள்ளது.
அதேவேளை மாகாண சுகாதாரத் திணைக்களமும் தனியானதொரு கருத்தடைத் திட்டத்தை முன்னெடுப்பதால், இரு திணைக்களங்களும் ஒருங்கிணைந்து பிரதேசங்களைப் பகிர்ந்தளித்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது.
இத்திட்டத்தை முன்னெடுக்கும்போது கடந்த ஆண்டு சில இடங்களில் பொதுமக்களின் எதிர்ப்பு எழுந்தமையால், சட்டரீதியான ஏற்பாடுகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பின் அவசியம் குறித்துப் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்திய பின்னரே அடுத்த மாதம் முதல் இத்திட்டத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், நாய்களைப் பிடிப்பவர்கள் உள்ளிட்ட இத்திட்டத்துடன் தொடர்புடைய பணியாளர்களுக்கான தடுப்பூசிகளை வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.













