குருநாகல், வெல்லவ பகுதியில் பெண்ணொருவர் மீது நபரொருவரால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குருநாகல், வெல்லவ பகுதியில் இன்று (23) காலை 6.45 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாகவும் அதில் காயமடைந்த 46 வயதுடைய பெண் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சம்பவம் குறித்து தெரிய வருகையில்,
பாதிக்கப்பட்ட பெண்ணுடன் கடந்த காலத்தில் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் நபரொருவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குறித்த பெண் இதற்கு முன்னர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்திருந்த போது, அந்த நபருடன் வாழ்ந்து வந்ததாகவும், பின்னர் மீண்டும் வெளிநாட்டிற்குச் சென்று திரும்பியதும் பிள்ளைகளின் வேண்டுகோளுக்கிணங்க அவரது சட்டப்பூர்வ கணவருடன் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, சட்டப்பூர்வ கணவரின் வீட்டில் இருந்தபோதே, அவருடன் முன்னர் தொடர்பில் இருந்த நபரால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணைகளின்படி, சந்தேக நபர் வீட்டின் அருகிலுள்ள காட்டுப் பகுதியில் மறைந்திருந்து இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக வெல்லவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.












