இலங்கை பல் வைத்திய சங்கத்தின் 93 ஆவது வருடாந்த அறிவியல் அமர்வின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் நாடளாவிய ரீதியில் சமத்துவமான சுகாதார சேவையை விரிவுபடுத்துவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தினார்.
இலங்கை பல் வைத்திய சங்கம் அதன் 93 ஆவது வருடாந்த அறிவியல் அமர்வை நேற்று கொழும்பு Cinnamon Life ஹோட்டலில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தது. விஞ்ஞான புத்தாக்கம், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை ஆகியவற்றின் மூலம் நாட்டின் வாய்வழி சுகாதாரப் பராமரிப்பினை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை இந்த நிகழ்வு வெளிப்படுத்தியது.

நிகழ்வில் கௌரவிக்கப்பட்ட மாணவர்கள் தங்கப் பதக்கம் வென்றவர்கள் சிரேஷ்ட ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புலமைப்பரிசில் பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அமர்வை ஆரம்பித்து வைத்த பிரதமர் சான்றுகள் அடிப்படையிலான மற்றும் புத்தாக்கத்தை நோக்கிய சுகாதாரப் பணியாளர்களை உருவாக்குவதில் இலங்கையின் கல்வி நிறுவனங்கள் காட்டும் அர்ப்பணிப்பை இந்தச் சாதனைகள் பிரதிபலிக்கின்றதாகத் தெரிவித்தார்.
ஒன்பது தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை பல் வைத்திய சங்கம் அறிவுப் பரிமாற்றம், தொழில்சார் தரங்களைப் பேணுதல் ஆகியன மூலமாக ஆற்றிவரும் நீண்டகாலப் பங்களிப்பை பிரதமர் பாராட்டினார்.
அத்தோடு பொதுச் சுகாதாரம் என்பது வெறும் மருத்துவமனை சிகிச்சையை மாத்திரம் சார்ந்தது அல்ல என்றும் நல்ல உடல்நலம், தடுப்பு சார்ந்த வாழ்க்கைமுறை தேர்வுகளில் இருந்தே அது ஆரம்பமாகிறது என்றும் தெரிவித்தார்.
‘வாய்வழி சுகாதாரம் இந்தப் பயணத்தின் முக்கியமானதொரு பகுதியாகும்’ எனக் கூறிய பிரதமர் ‘ஆரோக்கியமான புன்னகை என்பது பலமான பற்கள் இருப்பது மட்டுமல்ல அது நல்ல ஊட்டச்சத்துடனும், ஒரு குழந்தையின் கற்றல் திறனுடனும், ஒரு வளர்ந்தோரின் உழைப்புத் திறனுடனும் ஒவ்வொரு மனிதனின் ஒட்டுமொத்த நல்வாழ்வு கௌரவம் ஆகியவற்றுடன் தொடர்புடையதாகும்’ எனத் தெரிவித்தார்.












