சீனாவின் இராணுவம் திங்களன்று (06) அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து பசிபிக் பெருங்கடலில் ஏவுகணை ஒன்றை சோதனை செய்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெய்ஜிங்கின் விரிவடைந்து வரும் இராணுவ பலம் குறித்து ஜப்பான், அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் விமர்சனங்களையும் கவலைகளையும் எழுப்பியுள்ள நிலையில் இந்த சோதனை வந்துள்ளது.
மக்கள் விடுதலை இராணுவக் கடற்படையின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றினூடாக ஏவுகணையை பசிபிக் பெருங்கடலில் உள்ள சர்வதேச நீர்ப்பகுதியை நோக்கி நண்பகல் 12:01 மணிக்கு (0401 GMT) ஏவியதாக அதிகாரப்பூர்வ சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இந்த ஏவுகணைச் சோதனையை சீனாவின் வருடாந்திர இராணுவப் பயிற்சியின் ஒரு வழக்கமான ஏற்பாடு என்று சின்ஹுவா விவரித்ததுடன், இது எந்தவொரு குறிப்பிட்ட நாட்டையோ அல்லது இலக்கையோ குறிவைக்கவில்லை என்றும் கூறியது.
திட்டமிடப்பட்ட சோதனை குறித்து சீனா, அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்குத் தெரிவித்திருந்ததாக அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் கூறினார்.
ஆனால் இந்த ஏவுகணைச் சோதனை இப்பகுதிக்கு நிலைத்தன்மையைக் குலைக்கும் செயல் என்று விவரித்தார்.












