வனவிலங்கு பொருட்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகத் தொடரப்பட்ட வழக்கை எதிர்கொண்டுள்ள நடிகர் மோகன்லால், அதற்கு மேலதிகமாக தன்னிடம் மேலும் ஆறு யானைத் தந்தங்கள் மற்றும் 13 தந்தச் சிலைகள் இருப்பதாகக் கேரள வனத்துறையிடம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், தனிநபர்கள் தங்கள் வசம் உள்ள வனவிலங்கு பொருட்களின் விவரங்களை முன்வந்து அறிவிப்பதற்காகக் கேரள வனத்துறை சார்பில் பொதுமன்னிப்புத் திட்டமொன்று அறிவிக்கப்பட்ட நிலையில் மோகன்லால் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வனத்துறை அதிகாரிகளின் தகவல்படி, நடிகர் மோகன்லால் புதிதாக அறிவித்துள்ள பொருட்களின் 6 யானைத் தந்தங்கள், 13தந்தச் சிலைகள், கிருஷ்ணர், ராமர் மற்றும் திருப்பதி பாலாஜி ஆகிய கடவுளர்களின் உருவச்சிலைகள் என்பன காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகர் மோகன்லாலின் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியபோது அங்கு சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த யானைத் தந்தங்கள் மற்றும் தந்தத்திலான சிலைகள் மீட்கப்பட்டதுடன் தொடர்ந்து, முறையான அனுமதியின்றி இரண்டு ஜோடி யானைத் தந்தங்களை வைத்திருந்ததாக அவர் மீது வனத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.















