நீர்கொழும்பு சிறைச்சாலை யில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது உயிரிழந்த 8-வது சிறைச்சாலை அதிகாரியான, சிறைச்சாலை காவலர் எம்.ஜி. உபாலி அவர்களின் உடல் இன்று (09) கம்புருபிட்டியவில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
கைதிகளின் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறைச்சாலை காவலர் மத்தக கமகே உபாலி நேற்று நண்பகல் உயிரிழந்தார்.
42 வயதான சிறைச்சாலை காவலர் உபாலி, கடற்படையில் 12 ஆண்டுகள் சேவையாற்றிய பின்னர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சிறைச்சாலை சேவையில் இணைந்திருந்தார்.
சிறைச்சாலை காவலரின் உடல் இன்று பிற்பகல் கம்புருபிட்டிய கொரபாவித்த பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்படவுள்ளது.
மேலும், நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளின் தாக்குதலினால் உயிரிழந்த சிறைச்சாலை ஜெயிலர் எஸ்.எச்.எஸ் சந்திரவங்ச உள்ளிட்ட பல அதிகாரிகளின் உடல்களுக்கான இறுதிச் சடங்குகள் இன்று (09) பிற்பகல் நடைபெறவுள்ளன.












