திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவ சமூகத்தினர், நீண்டகாலமாகத் தமக்கு நிலவி வரும் குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி இன்று (20) காலை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை மாவட்டக் காரியாலயத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளனர்.
பல வருட காலமாகத் தாம் எதிர்கொண்டு வரும் பல்வேறு குறைபாடுகள் குறித்து திருகோணமலை மாவட்ட அரசியல் தலைமைகள் நன்கு அறிந்திருந்தும் அவை தொடர்பாக எவ்வித சாதகமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என மீனவப் பிரதிநிதிகள் இதன்போது கவலை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள்:
‘மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் எமது வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் குறித்துப் பேசுவதற்குத் நாம் முற்படும் போதெல்லாம் ‘உங்களது பிரச்சினைகள் பற்றி எமக்கு நன்கு தெரியும்’ எனக் கூறி அரசியல் தலைமைகள் எங்களை அமரச்செய்து விடுகின்றனர். எமது குரல் அங்கே ஒடுக்கப்படுகிறது.’
அரசியல் தலைமைகளின் இத்தகைய அணுகுமுறையினால் தங்களது நியாயமான கோரிக்கைகள் தொடர்ச்சியாகப் பாராமுகமாகவே காணப்படுவதாகவும்இ இதன் காரணமாகவே மாற்று வழியாக மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடி இன்று முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இவ்விடயம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு உரிய விசாரணைகளை மேற்கொண்டு தமக்கான நீதியையும் வாழ்வாதாரப் பாதுகாப்பையும் பெற்றுத்தர வேண்டும் என மீனவ சமூகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.













