அமெரிக்காவில் 11 பேருடன் பயணித்த சிறிய ரக விமானம் ஒன்றுஇ அவசரமாக நீரிலிறக்க முயன்றபோது விபத்துக்குள்ளாகித் தீப்பிழம்பாக வெடித்துச் சிதறியதில் பயணிகள் பலர் காயமடைந்ததுடன் ஒருவர் உயிருக்குப் போராடி வருகின்றதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாஷிங்டனில் உள்ள சுசியா தீவுக்கு அருகே உள்ள ‘ஷாலோ பே’ பகுதியில் விபத்துக்குள்ளானது.இது சீயட்டில் நகரிலிருந்து புறப்பட்ட 45 நிமிடங்களில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. ‘கென்மோர் எயார்’ நிறுவனத்தால் இயக்கப்படும் இந்த விமானம், ‘ரோச் ஹார்பர்’ நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது அதன் விமானி அவசரமாகத் தரையிறக்க முயன்றதாகவும் அதன்பின்னரே விமானம் தீப்பிடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விமானம் எரிந்து சாம்பலான போதிலும் அதிர்ஷ்டவசமாக விமானி உட்பட பயணித்த 11 பேரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். விமான விபத்து தொடர்பில் அதிகாரிகள் தரப்பில் கூறுகையில்: ‘விபத்தில் ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார்.
மற்றவர்களுக்குத் தலைக்காயம்இஎலும்பு முறிவுகள் மற்றும் வெட்டுக் காயங்கள் உள்ளிட்ட பல்வேறு காயங்கள் ஏற்பட்டுள்ளன’ என்று தெரிவித்தனர். காயமடைந்த பயணிகளில் இருவர் அமெரிக்கக் கடலோரக் காவல்படையின் ஹெலிகாப்டர் மூலம் ‘பெல்லிங்ஹாம்’ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும் இருவர் மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக அருகில் உள்ள ‘ஒர்காஸ் தீவுக்கு’ அழைத்துச் செல்லப்பட்டனர்.
அமெரிக்கக் கடலோரக் காவல்படை மற்றும் ‘சான் ஜுவான் கவுண்டி’ ஷெரிப் அலுவலகம் உள்ளிட்ட பல அவசர கால மீட்பு முகமைகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக ‘ஒர்காஸ் தீவு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை’ தெரிவித்துள்ளது.














