இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த சுமார் 1,025 வாகனங்களை இதுவரையில் விடுவித்துக்கொள்ள இறக்குமதியாளர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
இவற்றில் 625 வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு 6 மாதங்களுக்கும் மேலாகின்றன என இலங்கை சுங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த வாகனங்கள் எதிலும் எவ்விதமான சுங்கக் குற்றங்களும் நிலுவையில் இல்லை எனத் தெரிவித்த ஊடகப் பேச்சாளர்:
“எவ்வித சட்டச் சிக்கல்களும் இன்றி துறைமுகத்தில் முடங்கிக் கிடக்கும் இந்த வாகனங்களை, சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 129 ஆவது பிரிவுக்கு அமைவாகப் பகிரங்க ஏலம் விடுவதற்கோ அல்லது டெண்டர் கோரி விற்பனை செய்வதற்கோ எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.”எனத் தெரிவித்தார்.
சட்ட விதிமுறைகளின்படி, நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் எந்தவொரு பொருளையும் ஒரு மாத காலத்திற்குள் அதற்குரிய வரிகளைச் செலுத்தித் துறைமுகத்திலிருந்து விடுவித்துக்கொள்ள வேண்டும்.
தவறும்பட்சத்தில், அவற்றை அரசு விற்பனை செய்து, அதற்குரிய வரித் தொகையை அறவிட்டுக்கொள்ளச் சட்டத்தில் ஏற்பாடுகள் உள்ளன.
விற்பனை மூலம் கிடைக்கும் தொகையிலிருந்து அரசாங்கத்திற்கான வரிகள் மற்றும் துறைமுகக் களஞ்சியக் கட்டணங்கள் கழித்துக் கொள்ளப்படும். அதன்பின்னரும் தொகையேதும் எஞ்சியிருப்பின், அது சம்பந்தப்பட்ட இறக்குமதியாளருக்கு வழங்கப்படும் என சுங்கப் பேச்சாளர் தெளிவுபடுத்தினார்.
ஒரு மாதத்திற்கும் மேலாக விடுவிக்கப்படாத பொருட்கள் குறித்து துறைமுகக் கட்டுப்பாட்டாளர் சுங்கத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதை அடுத்து இந்நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இருப்பினும், தகுந்த மற்றும் நியாயமான காரணங்களினாலேயே வாகனங்களை விடுவித்துக்கொள்ள முடியாமல் போனது குறித்து ஏதேனும் இறக்குமதியாளர் தெளிவுபடுத்தினால், அது குறித்து பரிசீலிப்பதற்கான வாய்ப்புகளும் திறந்தே உள்ளதாக இலங்கை சுங்கம் மேலும் தெரிவித்துள்ளது.














