2026 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான மின்கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.
தேசிய மின்சார அமைப்பு இயக்குநர் நிறுவனத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட செலவீன மதிப்பீடுகளை பரிசீலித்த பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சார விநியோகச் செலவு வெறும் 0.3 சதவீதம் அல்லது 417 மில்லியன் ரூபாவால் மட்டுமே அதிகரித்துள்ளதால், மின்கட்டண திருத்தம் அவசியமில்லை என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக, இரண்டாம் காலாண்டில் நடைமுறையில் இருந்த மின்கட்டண அமைப்பே தொடரும்.
முதலாம் காலாண்டில் பதிவான 30,118 மில்லியன் ரூபா வருவாய் உபரியில், பின்னர் கட்டண கணக்கீட்டிலிருந்து நீக்கப்பட்ட நிலக்கரி மின் உற்பத்திச் செலவுகள் உள்ளடக்கப்பட்டிருந்ததாகவும், அதனைத் தொடர்ந்து 26,753 மில்லியன் ரூபா இருப்புத் தொகை முன்னோக்கி கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் PUCSL தெரிவித்துள்ளது.
இந்தத் தொகையுடன் மூன்றாம் காலாண்டிற்கான 159,274 மில்லியன் ரூபா விநியோகச் செலவு சேர்க்கப்பட்டபோது, மொத்த செலவு 186,027 மில்லியன் ரூபாவாக கணக்கிடப்பட்டுள்ளது.
தற்போதைய கட்டண அடிப்படையில் மூன்றாம் காலாண்டு வருவாய் 156,244 மில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளதுடன், 2025 ஆம் ஆண்டில் கிடைத்த 6,943 மில்லியன் ரூபா இலாபம், நுகர்வோருக்கான 9,650 மில்லியன் ரூபா அரசாங்க மானியம் மற்றும் தேசிய மின்சார அமைப்பு இயக்குநரின் செயற்பாடுகளுக்கான 17,213 மில்லியன் ரூபா நிதி ஆகியவை சேர்க்கப்பட்டபோது மொத்த வருவாய் 185,610 மில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது.
மொத்த செலவு மற்றும் வருவாய்க்கு இடையிலான வித்தியாசம் வெறும் 417 மில்லியன் ரூபா மட்டுமே என்பதால், இந்த காலாண்டில் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.













