இந்தியாவிலிருந்து கடத்தப்பட்டு அமெரிக்க அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ள 3,000 சிலைகள் மற்றும் தொல்பொருட்களை மீட்கக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
முன்னதாக, சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளின் ஆவணங்கள் திருடுபோனது குறித்து கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், அது குறித்து ஆராய சிறப்பு அதிகாரியை நியமித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய மனுவில், செம்பியன் மாதேவி, திருஞானசம்பந்தர் உள்ளிட்ட விலைமதிப்பற்ற சிலைகள் அமெரிக்காவிலும், 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சரஸ்வதி தேவி சிலை இங்கிலாந்திலும் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தூதரக அளவிலான பேச்சுவார்த்தைகள் மூலம் இவற்றை மீண்டும் கொண்டுவர ஏதுவாக, மத்திய உள்துறை மற்றும் கலாச்சார அமைச்சகங்களையும் இவ்வழக்கில் இணைத்து உத்தரவிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
















