2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இலங்கை பொருளாதாரம் 4.2 சதவீத நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய தேசிய கணக்கு மதிப்பீடுகளின்படி, ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரையிலான காலப்பகுதியில் இந்த பொருளாதார வளர்ச்சி பதிவாகியுள்ளது.
2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 5.1 சதவீத பொருளாதார வளர்ச்சி பதிவாகியிருந்த நிலையில், அதற்கமைய இரண்டாம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி வேகம் 4.2 சதவீதம் வரை குறைவடைந்துள்ளது.
இரண்டாம் காலாண்டில் கைத்தொழில் துறை 7.3 சதவீத குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ள அதேவேளை, சேவைத் துறை 2.7 சதவீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளது.
எப்படியிருப்பினும், விவசாயத் துறையில் 2.3 சதவீத பின்னடைவு பதிவாகியுள்ளது.
கைத்தொழில் துறையின் வளர்ச்சிக்கு சுரங்க மற்றும் அகழ்வாராய்ச்சி தொழில், கட்டுமானத் துறை மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி விநியோகத் துறைகளின் வளர்ச்சி முக்கிய காரணியாக அமைந்துள்ளது.
சேவைத் துறையில் தகவல் தொழில்நுட்ப சேவைகள் 10 சதவீதமும், காப்பீட்டு சேவைகள் 8 சதவீதமும் மற்றும் நிதிச் சேவைகள் 7.7 சதவீதமும் வளர்ச்சியடைந்துள்ளன.
இதனிடையே, விவசாயத் துறையின் பின்னடைவுக்கு நன்னீர் மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் நெல் சாகுபடி குறைவடைந்தமையே முக்கிய காரணம் என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவிக்கிறது.
2026 இரண்டாம் காலாண்டில் தற்போதைய சந்தை விலைகளின் கீழ் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8,254,176 மில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், இது 11.3 சதவீத வளர்ச்சியாகும்.
மத்திய கிழக்கு நெருக்கடி நிலை மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மை காரணமாக சுற்றுலாத் துறையில் சற்று மந்தநிலை காணப்பட்ட போதிலும், இறக்குமதி அளவுகளின் வளர்ச்சி காரணமாக உள்நாட்டு உற்பத்திகளுக்குத் தேவையான மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடிந்தமை மற்றும் கட்டுமானத் துறையின் விரிவாக்கம் என்பன பொருளாதார வளர்ச்சிக்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.













