இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது காயம் அடைந்த இலங்கை கிரிக்கெட் வீரர் தினேஷ் சந்திமால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்கேன் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
காலியில் நடைபெற்று வரும் குறித்த டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின் போது அவர் காயமடைந்துள்ளார்.
களத்தடுப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த அவர் பவுண்டரியைத் தடுக்கும் முயற்சியில் பாய்ந்தபோது சந்திமாலுக்கு வலது தோள்பட்டை மற்றும் கழுத்தில் காயம் ஏற்பட்டது.
இதனால், இலங்கை அணியின் பிசியோதெரபிஸ்ட் மற்றும் மருத்துவரால் மைதானத்திலேயே சந்திமால் பரிசோதிக்கப்பட்டார்.
அதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்கேன் பரிசோதனைக்காக அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அதன் முடிவுகள் கிடைத்தவுடன் சந்திமாலின் உடல்நிலை குறித்த மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.














