கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) செப்டம்பர் 1 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
2008 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் வேறு சில சந்தேக நபர்களுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
2008-ஆம் ஆண்டில் மட்டக்களப்பு கல்லடி முருகன் கோவிலுக்கு அருகில் முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்கள், 2008 மே 22 அன்று காத்தான்குடி பிரதான வீதியில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் 2008 ஆகஸ்ட் 20 அன்று இரவு வவுணதீவில் ஆயுதமேந்திய குழுவினால் மற்றொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் உள்ளிட்ட பல சம்பவங்கள் தொடர்பாக சந்திரகாந்தனை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சந்தேகநபர் எனப் பெயரிட்டுள்ளது.














