உள்நாட்டு உற்பத்திகளை ஏற்றுமதிப் பொருட்களாக மாற்றி, அந்நியச் செலாவணி வருமானத்தை அதிகரிப்பதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதி விவசாயத் தொழில் ஊக்குவிப்பு திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாரம்பரிய ஏற்றுமதிப் பயிர்களான தேயிலை, தென்னை மற்றும் இறப்பர் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியைத் தடுத்து, உற்பத்தியை மீள அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, தேயிலை உற்பத்தியை மீண்டும் அதிகரித்து அந்நியச் செலாவணியை ஈட்டும் நோக்கில் “Ceylon Tea Village 500” வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும், அதன் முதற்கட்டமாக 144 சிலோன் டீ தேயிலைக் கிராமங்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் 203 தேயிலைத் தொழிற்சாலைகள் தற்போது முழுமையாக மூடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், பெருந்தோட்டத் துறையில் நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, தென்னை உற்பத்தியை அதிகரித்து கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் 250 புதிய தென்னைக் கிராமங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டுக்குள் 75 கிராமங்களை உருவாக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தேயிலைத் துறையை மாத்திரம் நம்பியிருக்கும் நிலையை மாற்றி, அவர்களின் வருமானத்தை பல்வகைப்படுத்த வேண்டும் எனவும் கிட்ணன் செல்வராஜ் கூறியுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக மலையகத்தில் தற்போது பயன்படுத்தப்படாமல் காணப்படும் தரிசு மற்றும் காடுகளாக மாறியுள்ள நிலங்களை அடையாளம் கண்டு, அவற்றில் சிறு ஏற்றுமதிப் பயிர்களை உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாற்றுப் பயிர்ச்செய்கை மற்றும் சிறு ஏற்றுமதிப் பயிர் அபிவிருத்தி மூலம் மலையக மற்றும் கிராமப்புற மக்களின் வருமானத்தை அதிகரித்து, வறுமையை குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.














