செயற்கை நுண்ணறிவு (AI), வர்த்தகம் மற்றும் ஈரான் விவகாரம் வரை வல்லரசு நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தைத் தணிப்பதை நோக்கமாகக் கொண்ட உத்தியோகபூர்வ அரசுமுறைப் பயணத்தைத் தொடங்கும் வகையில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரிதான முறையில் விமான நிலையத்திற்கே நேரில் சென்று ஆடம்பரமான வரவேற்பை அளித்துள்ளார்
வொஷிங்டனுக்கு வெளியே உள்ள அமெரிக்க இராணுவ விமானத் தளமான ‘ஜொயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸில்’ (Joint Base Andrews) சீன ஜனாதிபதி தனது விமானத்திலிருந்து இறங்கியதும், ட்ரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா ஆகியோர் ஜி ஜின்பிங் மற்றும் அவரது மனைவி பெங் லியுவான் ஆகியோருக்குக் கைலுக்கி வரவேற்பளித்தனர்.
இன்று வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் நடைபெறும் அரசு விருந்து மற்றும் மற்றொரு விமான அணிவகுப்பு ஆகியவை அடங்கும். அமெரிக்க அதிகாரிகள் சீனத் தலைவருக்குச் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்த நிலையில், ஓடுபாதையில் ஆறு F-22 போர் விமானங்களும் ஆறு F-16 விமானங்களும் அணிவகுத்து நின்றமை அமெரிக்காவின் இராணுவப் பலத்தைக் காட்டுவதாக அமைந்திருந்தது.
இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெய்ஜிங்கிற்குப் பயணம் மேற்கொண்டு நான்கு மாதங்களின் பின்னர், ஜி ஜின்பிங் வொஷிங்டனுக்குப் பதில் பயணமாக வந்துள்ளார்.
மேலும் உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களுக்கு இடையே நிலவும் பலவீனமான இராஜதந்திர மற்றும் வர்த்தக அமைதியைத் தக்கவைப்பதே இந்த ஆடம்பரமான வரவேற்பின் முக்கிய நோக்கம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

















