பிரித்தானியாவில் நீர் மாசுபாடு மற்றும் வெள்ளப் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த எட்டு புதிய பிராந்தியக் குழுக்கள் அமைக்கப்படவுள்ளன.சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராமப்புற விவகாரங்களுக்கான திணைக்களம் இந்தத் திட்டத்தை அறிவித்துள்ளது.
இங்கிலாந்தின் எட்டு பிராந்தியங்களில் உருவாக்கப்படும் இந்தக் குழுக்களில் உள்ளூர் தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகள் இடம்பெறுவர்.
ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதால் ஏற்படும் மாசுபாட்டைக் குறைத்தல், வெள்ளப் பாதிப்புகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் வறட்சியை எதிர்கொள்ளுதல் ஆகியவை முக்கிய நோக்கங்களாகும்.
மேலும், நீர் மற்றும் வெள்ளப் பாதுகாப்பு உட்கட்டமைப்புகளுக்காக ஒதுக்கப்படும் பெருமளவிலான முதலீடுகள் எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதிலும் இந்தக் குழுக்கள் ஆலோசனைகளை வழங்கும்.
பிராந்தியங்களின் தேவைகளுக்கு ஏற்ப நீர் மேலாண்மைத் திட்டங்களை உருவாக்கி, உள்ளூர் மக்களின் கருத்துக்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
















