எல்-நினோ காலநிலைத் தாக்கத்தை எதிர்கொள்வதற்கான வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டமிடல்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (21) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, தற்போதைய எல்-நினோ நிலைமையால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள், அவற்றைத் தீர்ப்பதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள், மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்கான நீர் விநியோகம் குறித்து ஜனாதிபதி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறலின்படி, எதிர்வரும் 2027ஆம் ஆண்டு பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வறட்சி ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயம், பெருந்தோட்டம், நன்னீர் மீன்பிடி, நீர் மற்றும் மின்சார விநியோகத்துக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்ள முன்கூட்டியே திட்டங்களைத் தயாரிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் சிறிய குளங்களில் நீர்மட்டம் குறைவடையும் பகுதிகளை முன்கூட்டியே அடையாளம் காணவும், நீர்வெட்டை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டால் மக்களுடன் கலந்துரையாடி முறையான திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் அவர் பணிப்புரை விடுத்தார்.
மேலும், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகும் மழைக்காலத்தில் கிடைக்கும் மழைநீரை அதிகபட்சமாக சேமிப்பதற்காக நீர்ப்பாசனக் கட்டமைப்புகளை உடனடியாக புனரமைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.
அத்துடன், எதிர்வரும் பெரும்போகத்திற்குத் தேவையான விதை நெல் மற்றும் உரம் வழங்குதல், மீனவ மற்றும் பெருந்தோட்ட சமூகங்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்தல், வனவிலங்குகளுக்கான நீர் தேவையை பூர்த்தி செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் கலந்துரையாடப்பட்டன.
நீர்த்தேக்கங்கள் வறண்டு போகக்கூடிய காலத்தில் ஏற்படக்கூடிய மின்சார நெருக்கடியை தவிர்க்க, மேலதிக மின்சார உற்பத்தித் திறனை திட்டமிட்டு பேணுவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.













