சுவிட்சர்லாந்தின் லோசான் நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் தடகள சாம்பியன்ஷிப் தொடரின் 12-வது கட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில், இலங்கையின் வீரர் ரூமேஷ் தரங்க 88.14 மீட்டர் தூரம் எறிந்து முதலிடத்தைப் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இன்று (22) காலை நிறைவடைந்த இப்போட்டியில் கடும் சவாலை அளித்த இந்தியாவின் ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா 88.05 மீட்டர் தூரம் எறிந்து இரண்டாம் இடத்தையும், கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 86.69 மீட்டர் தூரம் எறிந்து மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
இந்த வெற்றியின் மூலம் ரூமேஷ் தரங்க தொடர்ச்சியாக மூன்று டைமண்ட் லீக் போட்டிகளிலும் முதலிடத்தைப் பிடித்துத் தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
23 வயதான ருமேஷ் தரங்க பத்திரகே, 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்றதன் மூலம், காமன்வெல்த் வரலாற்றில் இலங்கை பெற்ற 6வது தங்கப் பதக்கத்தைப் பதிவு செய்திருந்தார்.
2006-ல் பளுதூக்கும் வீரர் சிந்தன கீத்தல் விதானகே தங்கம் வென்றதற்குப் பின்னர் 20 ஆண்டுகள் கழித்து இலங்கை பெற்ற ஒரே தங்கப் பதக்கமாகவும், 1950-ல் டங்கன் வைட் தங்கம் வென்றதற்குப் பின்னர் 76 ஆண்டுகள் கழித்துத் தடகளப் பிரிவில் இலங்கை பெற்ற முதலாவது தங்கப் பதக்கமாகவும் அவரது காமன்வெல்த் வெற்றி அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

















