உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான Nvidia நிறுவனத்தின் கணக்கியல் முறைமைகள் தொடர்பில் அமெரிக்கப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு (SEC) விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விசாரணை தொடர்பான தகவல்களை அறிந்த இருவரை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
Nvidia நிறுவனத்தின் கணக்கியல் நடவடிக்கைகளில் முறைகேடுகள் இடம்பெற்றிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் SEC விசாரணை அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், விசாரணை ஆரம்பிக்கப்பட்ட திகதி மற்றும் அதற்கு உட்படுத்தப்பட்டுள்ள குறிப்பிட்ட கணக்கியல் விவகாரங்கள் தொடர்பான விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்க SEC மறுத்துள்ளதுடன், Nvidia நிறுவனமும் இதுவரை பதிலளிக்கவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணை தொடர்பான தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமையன்று Nvidia நிறுவனத்தின் பங்கு விலை சுமார் 13 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
முன்னதாக 6 சதவீதத்திற்கும் அதிகமான வீழ்ச்சி பதிவாகியிருந்த நிலையில், புதிய தகவல்களைத் தொடர்ந்து பங்கு விலையில் சரிவு மேலும் தீவிரமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், Nvidia நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜென்சன் ஹுவாங் தொடர்பான சர்ச்சைகளும் நிறுவனத்தின் மீதான கவனத்தை அதிகரித்துள்ளன.
சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட Megaspeed நிறுவனத்தின் முன்னாள் தலைவி அலிஸ் ஹுவாங்குடன் அவர் பேணிய தனிப்பட்ட தொடர்பு குறித்த தகவல்கள் அண்மையில் வெளியாகியிருந்தன.
அலிஸ் ஹுவாங் சீன உளவாளியாக இருக்கக்கூடும் என அமெரிக்க அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகளை சீனா மறுத்துள்ளது.
அத்துடன், Megaspeed நிறுவனம் ஊடாக Nvidia நிறுவனத்தின் உயர்தர செயற்கை நுண்ணறிவு சிப்கள் சீனாவுக்கு அனுப்பப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் அமெரிக்க அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தப் பின்னணியில், Nvidia நிறுவனத்தின் பங்கு மதிப்பு மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
குறிப்பாக, கடந்த ஆண்டு Nvidia நிறுவனம் தனது புவியியல் அடிப்படையிலான வருமான அறிக்கையிடல் முறைமையில் மேற்கொண்ட மாற்றமும் தற்போது கவனத்திற்கு உள்ளாகியுள்ளது.
முன்னதாக, வாடிக்கையாளர்களின் பற்றுச்சீட்டு முகவரியை (Billing Address) அடிப்படையாகக் கொண்டு வருமானத்தை அறிக்கையிட்டு வந்த அந்த நிறுவனம், பின்னர் வாடிக்கையாளர் நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் அமைந்துள்ள நாடுகளின் அடிப்படையில் வருமானத்தை அறிக்கையிடும் முறைக்கு மாறியிருந்தது.
இதனையடுத்து, சிங்கப்பூர் தனது புவியியல் வருமான அறிக்கையிடலில் இருந்து நீக்கப்பட்டதுடன், அந்த நாட்டில் பதிவான விற்பனை அந்த நிறுவனத்தின் மொத்த உலகளாவிய வருமானத்தில் அரைவாசிக்கு அண்மித்த அளவை எட்டியிருந்ததாக Financial Times செய்தி வெளியிட்டிருந்தது.
இதேவேளை, செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் மற்றும் தரவு மையத் திட்டங்களுக்கு Nvidia வழங்கும் நிதியுதவிகள், சிக்கலான முதலீட்டுப் பரிவர்த்தனைகள் ஆகியவையும் முதலீட்டாளர்களின் கவனத்திற்கு வந்துள்ளன.
இவ்வாறான பரிவர்த்தனைகள் காரணமாக நிறுவனத்தின் உண்மையான வருமான நிலைமை மற்றும் நிதி அபாயங்களைத் துல்லியமாக மதிப்பிடுவதில் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக, திறந்த மூல செயற்கை நுண்ணறிவுத் தளமான Hugging Face நிறுவனத்தைக் கையகப்படுத்துவதற்காக Nvidia மேற்கொண்டதாகக் கூறப்படும் 12.9 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பரிவர்த்தனையும் அமெரிக்க நீதித் திணைக்களத்தின் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், SEC விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை மாத்திரம் Nvidia நிறுவனம் ஏதேனும் தவறு இழைத்துள்ளமைக்கான உறுதிப்படுத்தலாகாது என ரொய்ட்டர்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், இவ்வாறான விசாரணைகள் சில சந்தர்ப்பங்களில் எவ்வித சட்ட நடவடிக்கைகளும் இன்றி முடிவடையக்கூடும் எனவும் அந்தச் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

















