கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற கொடூர வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
உஹான, நுவரெலியா, வீரம்புகெதர மற்றும் ஹபரடுவ ஆகிய பொலிஸ் பிரிவுகளிலேயே இவ்விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
அம்பாறை – கண்டி வீதியின் வெரங்கெட்டகொட சந்திப்புக்கு அருகில் கட்டுப்பாட்டை இழந்த வேன் ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மற்றும் இரு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியதில் வெரங்கெட்டகொடவைச் சேர்ந்த 39 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதேவேளை, நுவரெலியா – பேராதெனிய வீதியில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துடன் தனியார் பேருந்து ஒன்று மோதி, பாதசாரி மீதும் மோதியதில் இரத்தினபுரியைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் நுவரெலியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
மேலும், வீரம்புகெதர – ஹண்டகல பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவரும், ஹபரடுவ – பொல்டுவ பகுதியில் மிதிவண்டி மீது லொறி மோதியதில் உனவத்துனையைச் சேர்ந்த 63 வயது முதியவர் ஒருவரும் உயிரிழந்தனர்.
விபத்துக்களுடன் தொடர்புடைய வாகனச் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவங்கள் குறித்துச் சம்பந்தப்பட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.













