H-1B விசா திட்டம் மூலம் திறன்மிக்க வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்த விரும்பும் நிறுவனங்களிடமிருந்து 100,000 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான கட்டணத்தை வசூலிப்பதற்கான முன்மொழிவை ட்ரம்ப் நிர்வாகம் மீண்டும் உயிர்ப்பித்துள்ளது என்று அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் (DHS) புதிய ஆவணம் ஒன்று தெரிவிக்கிறது.
அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தனது அண்மைய முன்மொழிவில், H-1B விசா ஒதுக்கீட்டு வரம்பிற்கு உட்பட்ட விண்ணப்பங்களுக்கு 1,03,265 டொலர் என்ற புதிய கட்டணத்தைப் பரிந்துரைத்துள்ளது.
இது அந்நாட்டின் திறன்மிக்க பணியாளர்களுக்கான விசா கொள்கையில் மற்றொரு முக்கிய மாற்றத்தைக் குறிக்கிறது.
இந்தக் கொள்கை கடந்த ஆண்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பால் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால் ஒரு கூட்டாட்சி நீதிபதியால் அது தடுத்து நிறுத்தப்பட்டது.
இது நிர்வாகத்தின் விரிவான குடியேற்றக் கட்டுப்பாட்டு நடவடிக்கையின் மிக அண்மைய நடவடிக்கையாகும்.
அமெரிக்கத் தொழிலாளர்களைக் கொண்டு நிரப்புவதற்குச் சிரமமான, உயர் திறன் தேவைப்படும் பணிகளுக்கு வெளிநாட்டுத் திறமையாளர்களைப் பணியமர்த்த உள்நாட்டு நிறுவனங்களை H-1B திட்டம் அனுமதிக்கிறது.
இத்திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 65,000 பொது விசாக்களும், உயர்கல்வித் தகுதி (advanced degrees) பெற்றவர்களுக்காகக் கூடுதலாக 20,000 விசாக்களும் வழங்கப்படுகின்றன.
இவற்றின் கால அளவு மூன்று முதல் ஆறு ஆண்டுகள் வரை இருக்கும்.
அமேசான் மற்றும் மைக்ரோசாஃப்ட் போன்ற பெரும் நிதி வசதி கொண்ட தொழில்நுட்ப நிறுவனங்களே இத்திட்டத்தை அதிகளவில் பயன்படுத்துகின்றன.
இதில் ஒப்புதல் அளிக்கப்படும் விசாக்களில் ஏறக்குறைய நான்கில் மூன்று பங்கு இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கே கிடைக்கின்றன.
அரசுத் தரவுகளின்படி, 11.7 சதவீதத்துடன் சீனா வெகு பின்தங்கிய நிலையில் இரண்டாவது இடத்தில் உள்ளது.














