இமயமலை நதி ஒன்றில் மண்மேடுகள் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, நேபாளம், சீனாவின் திபெத் பகுதிகளில் 700-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் உட்பட சுமார் 1,500 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் இன்று (27) தெரிவித்தனர்.
புதன்கிழமை அன்று, காத்மாண்டுவை திபெத்தில் உள்ள லாசாவுடன் இணைக்கும், மலையேறுபவர்கள் மற்றும் யாத்ரீகர்கள் கூட்டம் நிறைந்த சாலையில் இந்த பேரழிவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து நேபாள மீட்புப் படையினர், உயிர் பிழைத்தவர்களைத் தேடுவதற்கும், நகரங்களிலும் பள்ளத்தாக்குகளிலும் துண்டிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு அவசரகாலப் பொருட்களை வழங்குவதற்கும் ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
அதேநேரம், இதுவரை தாங்கள் 177 பேரின் உடல்களை மீட்டிருப்பதாக நேபாளக் காவல்துறை தெரிவித்தது;
அதேநேரம், காணாமல் போன 826 பேரில் சுமார் 500 வெளிநாட்டினரும் அடங்குவர் என்று காவல்துறை மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருபத்து நான்குக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த காணாமல் போன சுற்றுலாப் பயணிகளில், 177 பேர் இந்தியாவையும், 63 பேர் அமெரிக்காவையும், 34 பேர் அவுஸ்திரேலியாவையும், 33 பேர் பிரிட்டனையும், 25 பேர் கனடாவையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
திபெத்தின் கியிரோங் (Gyirong) மாவட்டத்தில் 260 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 558 பேர் காணாமல் போயுள்ளதாகச் சீன அரசுக்குச் சொந்தமான சிசிடிவி (CCTV) தொலைக்காட்சி வியாழக்கிழமை தெரிவித்தது.
உயிரிழப்பு எண்ணிக்கை மூன்றாகவே நீடிப்பதாகச் சீனா கூறியது.
சரிபார்க்கப்பட்ட காணொளிகளில், ஜிரோங்கில் உள்ள ஒரு எல்லைக் கடக்கும் இடத்தில், பேரலைகளும் இடிபாடுகளும் டஜன் கணக்கான மக்களை அடித்துச் செல்வதும், அந்த நீரோட்டம் கீழ்நோக்கிப் பாய்ந்தபோது நேபாளத்தில் வீடுகள், சாலைகள் மற்றும் மின் திட்டங்கள் அடித்துச் செல்லப்படுவதும் பதிவாகியிருந்தன.
வியாழக்கிழமையன்று 20 வெளிநாட்டினர் உட்பட 125 பேரை மீட்ட மீட்புப் பணியில் 5,000-க்கும் மேற்பட்ட இராணுவம் மற்றும் காவல்துறை மீட்புப் பணியாளர்கள் இணைந்ததாக அவர் கூறினார்.
மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான நுவாகோட்டில் வெள்ள நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக நேபாளப் பிரதமர் பலேந்திர ஷா சாலை மார்க்கமாகப் புறப்பட்டதாக அவரது அலுவலகம் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளது.
எல்லைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம், பனியாற்றின் கீழ்ப்பகுதி சரிந்து வெள்ளத்தைத் தூண்டியிருக்கலாம் என்று நேபாள அதிகாரிகளிடமிருந்து வந்த ஆரம்பகட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஆரம்பத்தில் 4.4 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் என்பது, உண்மையில் பனியாற்றுப் பாறை மற்றும் பனிக்கட்டி சரிந்ததால் உருவான நில அதிர்வு ஆற்றல் என்றும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பாறைச்சரிவு என்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
















