நாஜிக்களின் ஆக்கிரமிப்பு காலத்தில் சிறுவயதிலேயே அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டு, ஐரோப்பிய உயர்குடிப் பெண்கள் பலரை மணக்க மறுத்துவிட்டுத் தனது பள்ளிப் பருவக் காதலியைத் திருமணம் செய்துகொண்ட நோர்வேயின் மன்னர் ஐந்தாம் ஹரால்ட் (Harald) வெள்ளிக்கிழமையன்று (28) காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 89.
அவர் ஒஸ்லோவில் உள்ள தேசிய மருத்துவமனையில் உள்ளூர் நேரப்படி காலை 6:35 மணிக்கு காலமானதாக அரசவை அறிவித்தது.
ஹரால்ட் ஐரோப்பாவின் மிக மூத்த மன்னராகத் திகழ்ந்தார்.
மக்களால் விரும்பப்பட்ட அம்மன்னர் அரச குடும்பத்தின் செயல்பாடுகளை நவீனப்படுத்தினார்.
இருப்பினும், அண்மைக்காலத்தில் பதவி விலகிய மற்ற வயதான மன்னர்களைப் பின்பற்றித் தானும் பதவி விலக அவர் மறுத்துவிட்டார்.
ஐரோப்பாவின் பிற அரச குடும்பங்களைப் போலவே, நோர்வே நாட்டு மன்னர்களும் பெரும்பாலும் அடையாள ரீதியான ஒரு பாத்திரத்தையே வகிக்கின்றனர்.
அவர்கள் பிரபலங்களுக்குரிய அந்தஸ்தைப் பெற்றிருந்தாலும், 55 லட்சம் மக்கள் தொகை கொண்ட அந்த ஜனநாயக நாட்டில் உண்மையான அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் வசமே உள்ளது.
1991-ஆம் ஆண்டு ஜனவரியில் பிரித்தானியாவில் பிறந்த தனது தந்தையான மன்னர் ஐந்தாம் ஒலவ் காலமானதைத் தொடர்ந்து ஹரால்ட் அரியணை ஏறியமையும் குறிப்பிடத்தக்கது.













