மத்திய மலைநாட்டு சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாப்பதற்குத் தேவையான முழுமையான அதிகாரங்களை வழங்கும் வகையில் மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை சட்டமூலத்தை இந்த ஆண்டின் இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டு பண்டாரவளை பூனாகலை கபராகல மலையில் ஏற்பட்ட மண்சரிவில் வீடுகளை இழந்த குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட ‘நவோதயபுரம்’ வீடமைப்புத் திட்டத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) ஒத்துழைப்புடன் மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மத்திய மலைநாட்டை அதன் முந்தைய நிலைக்கு மீட்டெடுக்க பல தசாப்தங்கள் தேவைப்படலாம் என்றாலும், தற்போது தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சுற்றுச்சூழல் அழிவை உடனடியாகத் தடுக்க வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
இலங்கையின் இதயமாகக் கருதப்படும் மத்திய மலைநாடு நாட்டின் கண்முன்னே அழிவடைந்து வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மண்சரிவுகள், இயற்கை நீரூற்றுகள் வற்றிச் செல்வது மற்றும் ஆறுகள், ஓடைகள் வண்டல் படிந்து மாசுபடுவது போன்ற நிலைகளை தாம் நேரில் கண்டுள்ளதாக தெரிவித்தார்.
சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர், மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபைக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, மலையகத் தமிழர்கள் முழுமையான உரிமைகளுடன் நாட்டின் சம குடிமக்களாக வாழ்வதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
தோட்டக் கம்பனிகளுடனான தற்போதைய ஒப்பந்தங்கள் 2042 ஆம் ஆண்டில் நிறைவடையும் நிலையில், அதன் பின்னர் புதுப்பிக்கப்படும் ஒப்பந்தங்கள் மலையகத் தமிழர் சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
மேலும், போர்காலத்தில் இலங்கையிலிருந்து இந்தியாவுக்குச் சென்றவர்களில் மீண்டும் நாட்டிற்கு திரும்ப விரும்புவோருக்குத் தடையாக உள்ள பிரச்சினைகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளை அமைச்சரவை முன்னெடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.















