நாரஹேன்பிட்ட பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில், கடத்தப்பட்ட இளம்பெண் ஒருவர் பயணித்த கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இன்று (29) பிற்பகல் பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் குழுவினர் குறித்த சோதனைச் சாவடியில் சந்தேகத்திற்குரிய காரை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.
எனினும், ஓட்டுநர் காரை நிறுத்தாமல் முன்னோக்கிச் செலுத்தியதால், வாகனத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, காரைச் செலுத்தி வந்த நபர், அதிலிருந்த இளம்பெண்ணையும் காரையும் சம்பவ இடத்திலேயே விட்டுவிட்டுத் தப்பி ஓடியுள்ளார்.
பொலிஸார் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணையில், மீட்கப்பட்ட 26 வயதுடைய இளம்பெண் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு (BMICH) அருகில் வைத்து கடத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய கடத்தல்காரனைக் கைது செய்வதற்கான தீவிர தேடுதல் நடவடிக்கைகளைப் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாகக் குருந்தவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.














