சர்வதேச சந்தையில் திங்களன்று (31) மசகு எண்ணெய் விலைகள் 2%-க்கும் அதிகமாக உயர்ந்தன.
GMT நேரம் 02:41 நிலவரப்படி, பிரெண்ட் மசகு எண்ணெய் எதிர்கால ஒப்பந்த விலை பீப்பாய்க்கு 2.51 டொலர் அல்லது 2.85% உயர்ந்து 90.61 டொலராக இருந்தது.
அதேவேளையில், அமெரிக்காவின் ‘வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட்’ (WTI) மசகு எண்ணெய் விலை 2.13 டொலர் அல்லது 2.55% அதிகரித்து 85.53 டொலராக இருந்தது.
மத்திய கிழக்கில் மோதல் ஆறாவது மாதமாகத் தொடரும் நிலையில், ஹார்முஸ் நீரிணையில் உள்ள ஈரானியத் தீவு ஒன்றை அமெரிக்கா தாக்கியதாலும், அதற்கு ஈரான் பதிலடி கொடுத்ததாலும் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
ஹார்முஸ் நீரிணையில் உள்ள ஈரானின் லாரக் தீவில் இருந்த இரண்டு ஏவுதளங்கள் மீது ஞாயிற்றுக்கிழமையன்று அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தின.
ஜூலை மாத இறுதியில் இருந்து வளைகுடா நாடான ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் இதுவே முதலாவதாகும்.
இதற்குப் பதிலடியாக, ஜோர்டானில் உள்ள அமெரிக்காவின் இரண்டு விமானப்படைத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக, அந்நாட்டின் புரட்சிகரப் படையை மேற்கோள்காட்டி ஈரானிய ஊடகங்கள் திங்கள்கிழமை செய்தி வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.













