முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் கமநலசேவை நிலையப்பிரிவின்கீழுள்ள பழம்பாசி கமக்கார அமைப்பிற்குட்பட்ட பகுதியில் வனவளத்திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விவசாயக் காணிகளை விடுவித்தல் டிட்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட குளச்சீரமைப்பிலுள்ள தாமதம், கைவிடப்பட்ட நிலையிலுள்ள குளங்களை சீரமைத்தல் உள்ளிட்ட அப்பகுதி விவசாயிகளின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேட்டறிந்துகொண்டார்.
குறிப்பாக பழம்பாசி கமக்கார அமைப்பினரின் கோரிக்கைக்கு அமைவாக அப்பகுதிக்கு நேரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.
அந்தவகையில் பழம்பாசி கமக்கார அமைப்பு பகுதிக்குட்பட்ட விளாப்புக்குளம் மற்றும் அக்குளத்தின்கீழான 21விவசாயிகளுக்குரிய 61ஏக்கர் காணிகளை வனவளத்திணைக்களம் ஆக்கிரமிப்புச்செய்து எல்லைக்கல் இட்டுள்தாக விவசாயிகளால் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அத்தோடு மதகுவைத்த குளத்தின் கீழுள்ள 07 விவசாயிகளுக்குரிய
29ஏக்கர் காணிகளை வனவளத் திணைக்களம் எல்லைக்கல்லிட்டு ஆக்கிரமிப்புச் செய்துள்ளதாகவும் விவசாயிகள் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையிட்டனர்.
எனவே தமது கமக்கார அமைப்புப் பிரிவில் வனவளத் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குளங்கள் மற்றும் விவசாயக் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென விவசாயிகள் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கைவிடுத்தனர்.
அதேவேளை கடந்த தித்வா அனர்த்தத்தின்போது உடைப்பெடுத்த தவசிகுளம் இதுவரை சீரமைக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய விவசாயிகள்இ அக்குளத்தை சீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கைவிடுத்தனர்.
அத்தோடு தமது பழம்பாசி கமக்கார அமைப்புபிரிவில் மணியர்குளம், மதகுவைச்சகுளம், பழையபழம்பாசிக்குளம் என்பன நீண்டகாலங்களுக்கு முன்பு அனர்தங்களின்போது உடைப்பெடுத்தபோதும் இதுவரை சீர்செய்யப்படவில்லைஎனத் தெரிவித்த விவசாயிகள், இவ்வாறு கைவிடப்பட்டுள்ள நிலையிலுள்ள குளங்களைச் சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கைவிடுத்தனர்.
இந்நிலையில் விவசாயிகளின் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்த நாடாளுமன்றஉறுப்பினர், வனவளத்திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விளாப்புக்குளத்தின்கீழான விவசாயக்காணிகளையும், டித்வா பேரிடரின்போது உடைப்பெடுத்து இதுவரை சீரமைக்கப்படாதுள்ள தவசிகுளத்தையும் நேரில் சென்று பார்வையிட்டார்.
அதேவேளை இதுதொடர்பில் எதிர்வரும் ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் உரியதரப்பினரின் கவனத்திற்கு கொண்டுவருவதுடன் இந்த விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் தெரிவிக்கப்பட்டது.
மேலும் குறித்த சந்திப்பிலும், களவிஜயத்திலும் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் இராசாரத்தினம் கிரிதரனும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.














