வறட்சியான காலநிலையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோக நடவடிக்கைகள் இடையூறு இன்றி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது.
நிலையததின் மூத்த உதவி செயலாளர் பிரகீத் தனன்சூரிய இதனைத் தெரிவித்தார்.
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மொனராகலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அம்பாறை, பதுளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதாகவும், அதற்கு இந்த மாவட்டங்களில் போதிய மழைவீழ்ச்சி இல்லாததே காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இம்மாத இறுதி வரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுவரை குடிநீர் கிடைக்காதவர்கள் அல்லது நீர் விநியோகத்தில் சிரமங்களை எதிர்கொள்பவர்கள் தங்களது கிராம அலுவலர் அல்லது பிரதேச செயலாளருக்கு தகவல் வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
அதேபோன்று, குடிநீர் விநியோகம் தொடர்பான ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையத்தின் 071 680 7807 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தேவையான குடிநீர் விநியோக நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் எனவும் பிரகீத் தனன்சூரிய கூறினார்.













